பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு


பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 7 Nov 2021 1:32 AM IST (Updated: 7 Nov 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் 11 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

நாகர்கோவில், 
நாகர்கோவிலில் தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் 11 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
11 பவுன் நகை பறிப்பு
நாகர்கோவில் பெசன்ட் நகரை சேர்ந்தவர் ஆதிதாசன். இவருடைய மனைவி சரோஜா (வயது 67). இவர் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு உடல் பரிசோதனைக்காக சென்றார். பரிசோதனையை முடித்ததும் மீண்டும் வீடு நோக்கி புறப்பட்டார்.  சிறிது தூரம் சென்ற போது, அவரை ஒரு மோட்டர் சைக்கிள் பின்தொடர்ந்தது. அதில் 2 மர்ம நபர்கள் இருந்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். சரோஜாவின் அருகில் அவர்கள் நெருங்கினர்.
அப்போது மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மர்ம நபர், அதிலிருந்து இறங்கினார். பின்னர் அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் சரோஜாவின் கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்தார். இதை சற்றும் எதிா்பாராத சரோஜா அதிர்ச்சி அடைந்தார். அதோடு திருடன்...திருடன்...என கூச்சலிட்டார். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
மர்மநபர்கள் தப்பி ஓட்டம் 
ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர். பொதுமக்கள் முயற்சி செய்தும் மர்ம நபர்களை பிடிக்க முடியவில்லை.
இந்த சம்பவம் பற்றி நேசமணிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினா். மேலும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மர்ம நபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. எனினும் மர்ம நபர்கள் போலீசாரிடம் சிக்கவில்லை.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
இதனை தொடர்ந்து வழிப்பறி சம்பவம் நடைபெற்ற இடத்தின் சுற்று வட்டார பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சம்பவம் நடந்த இடத்தின் அருகே உள்ள ஒரு வீட்டில் கண்காணிப்பு கேமரா இருந்தது தெரிய வந்தது. 
இதனையடுத்து அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து சரோஜாவிடம் நகையை பறித்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. மேலும் ஹெல்மெட் அணியாத மர்ம நபரின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
பரபரப்பு 
இதை தொடர்ந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி மா்ம நபர்களை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் பெண்ணிடம் மர்மநபர்கள் நகை பறித்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story