வடகிழக்கு பருவமழை: சாலைகளில் தண்ணீர் தேங்காமல் தடுக்க தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் அறிவுரை
வடகிழக்கு பருவமழையையொட்டி சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்காமல் தடுக்க தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் அறிவுரை வழங்கினார்.
சேலம்,
ஆலோசனை கூட்டம்
வடகிழக்கு பருவமழை காலங்களில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கை, டெங்கு கட்டுப்படுத்துதல் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பருவமழை மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி பேசியதாவது:-
கண்காணிப்பு
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள சாக்கடை கால்வாய்கள், நீர்வழி தடங்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் உபரிநீர் வெளியேறும் நீர்வழித்தடங்களுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் செல்லாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையிலும், அதை தடுக்கவும் தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் சாலை மற்றும் சாலையோறும் தேங்கியுள்ள மழைநீரை உடனே அப்புறப்படுத்துவற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை உடனே சரிசெய்வதற்கு தேவையான பொக்லைன் எந்திரம், குப்போட்டோ, டிப்பர் லாரிகள், டிராக்டர்கள், கழிவுநீர் அகற்றும் வாகனங்கள், மழைநீரை வெளியேற்றும் வாகனம் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
ஏரிகள், குளங்கள்
மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் போதிய மருந்துகள், மாத்திரைகள் இருப்பு வைத்து கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும் பகுதிகளிலுள்ள வடிகால்களில் அடைப்புகளை கண்டறிந்து மழைநீர் வடியும் வகையில் சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள், பொறியியல் பிரிவை சேர்ந்த அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஏரிகள், குளங்கள் அருகில் வசிக்கும் பொதுமக்கள் தாழ்வான பகுதியில் குடியிருப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கொரோனா தடுப்பு மற்றும் டெங்கு கட்டுப்படுத்துதல் நடவடிக்கையில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story