சேலம் உள்பட 8 மாவட்டங்களில், தீபாவளியையொட்டி சாராயம், மது விற்றதாக 431 பேர் கைது மண்டல மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை
சேலம் உள்பட 8 மாவட்டங்களில் தீபாவளியையொட்டி சாராயம், மது விற்றதாக 431 பேரை மண்டல மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
மது விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி சாராயம் மற்றும் சந்து கடைகளில் நடக்கும் மது விற்பனையை தடுக்கும் வகையில் மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஜெயந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அதன்படி, கடந்த 4-ந் தேதி தீபாவளியன்று சாராயம் மற்றும் சந்து கடைகளில் மது விற்பனை செய்ததாக 219 வழக்குகள் பதிவு செய்து, 219 பேர் கைது செய்யப்பட்டனர்.
540 லிட்டர் சாராயம், 2,130 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
431 பேர் கைது
அதேபோல், நேற்று முன்தினம் 5-ந் தேதி சாராயம் மற்றும் சந்து கடைகளில் டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக 212 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 212 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் 1,065 லிட்டர் சாராயமும், கர்நாடக மாநில மதுபாட்டில்கள் 167-ம், தமிழக டாஸ்மாக் கடை மதுபாட்டில்கள் 1,784-ம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
2 நாட்களில் மட்டும் சாராயம், மது விற்பனை செய்ததாக 431 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story