ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் 20 பவுன் நகைகள்- 4¼ கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் 20 பவுன் நகைகள்- 4¼ கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டுபோனது.
திருச்சி:
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;-
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி
திருச்சி திருவானைக்காவல் வித்யாலயா சாலை கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 60). ஆர்.எஸ்.எஸ். மாநில இணைச்செயலாளராக உள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் சென்னையில் உள்ள மகள் திருச்சிக்கு வந்திருந்தார்.
அவரை மீண்டும் சென்னையில் கொண்டு விடுவதற்காக கடந்த 4-ந்தேதி மாலை 4 மணி அளவில் சுப்பிரமணியன் புறப்பட்டார். அப்போது அவர் வீட்டை பூட்டி, வீட்டின் சாவியை திருச்சி முத்தரசநல்லூரில் உள்ள தனது தம்பி ஸ்ரீதரிடம் ஒப்படைத்து, வீட்டை பார்த்துக்கொள்ளும்படி கூறிச்சென்றார்.
20 பவுன் நகை, 4¼ கிலோ வெள்ளி திருட்டு
நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் ஸ்ரீதர் தனது அண்ணன் வீட்டுக்கு சென்றபோது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் படுக்கை அறைக்கு சென்று பார்த்தார்.
அப்போது, அங்கிருந்த சாவியை பயன்படுத்தி பீரோவை திறந்து, அதில் இருந்த 20 பவுன் நகைகள், 4 கிலோ 350 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தன. உடனடியாக இதுபற்றி ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்துக்கு ஸ்ரீதர் தகவல் கொடுத்தார்.
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு ஸ்ரீரங்கம் சரக உதவி போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், கடந்த 4-ந்தேதி நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து, நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சுப்பிரமணியனின் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். மேலும் ஸ்ரீதர் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story