வாலிபர் தலை துண்டித்து கொலை - தலையில்லா உடலை முந்திரி தோப்பில் புதைத்தது யார்?
பெரியபாளையம் அருகே வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். அவரது தலையில்லா உடலை முந்திரி தோப்பில் புதைத்தது யார்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த செங்காத்தாகுளம் கிராமம், ஏரிக்குப்பம் முந்திரி தோப்பில் நேற்று மதியம் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் ரத்தக்கறையுடன் பிணம் ஒன்று புதைக்கப்பட்டு உள்ளதாக பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
மேலும் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் ஆகியோரும் ஏரிக்குப்பம் கிராமத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் முன்னிலையில் புதைக்கப்பட்டிருந்த உடலை போலீசார் தோண்டி எடுத்தனர். கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தவருக்கு 30 வயது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வாலிபரின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த மர்மநபர்கள், உடலை மட்டும் அங்கேயே புதைத்து விட்டு கொலையான வாலிபரின் தலையுடன் தலைமறைவானது தெரிய வந்தது. சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
மோப்பநாய் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. போலீசார் வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வாலிபரின் உடலை புதைத்து விட்டு தலையை கொண்டு சென்ற குற்றவாளிகள் யார்?. இந்த கொலை சம்பவம் நடைபெற்றது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருத்தணி அருகே உள்ள தாடூர் கிராமத்தைச் சேர்ந்த ராசுகுட்டி (25) என்ற வாலிபர் உறவு முறை தவறி காதல் திருமணம் செய்து கொண்டதால் கொலை செய்யப்பட்டு இதே பகுதியில் உள்ள கால்வாயில் அவரது உடல் வீசப்பட்டு இருந்தது.
இதனை திருத்தணி போலீசார் கைப்பற்றினர். இதனால் அந்தகொலைக்கும் தற்போது நடைபெற்ற கொலைக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story