பள்ளிப்பட்டு அருகே ஊராட்சி மன்ற துணைத்தலைவி கணவர் மர்மச்சாவு - உடலை வாங்க மறுத்த உறவினர்கள்


பள்ளிப்பட்டு அருகே ஊராட்சி மன்ற துணைத்தலைவி கணவர் மர்மச்சாவு - உடலை வாங்க மறுத்த உறவினர்கள்
x
தினத்தந்தி 7 Nov 2021 11:33 AM IST (Updated: 7 Nov 2021 11:33 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு அருகே ஊராட்சி மன்ற துணைத்தலைவி கணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொம்மராஜூபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவரது மனைவி விஜயா (36). பொம்மராஜூபேட்டை ஊராட்சி மன்ற துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர்களுக்கு ஹேமாவதி (15), கீர்த்தனா (13) என்ற மகள்களும், புகழேந்தி (12) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் ரமேஷ் நேற்று காலை பள்ளிப்பட்டு தாலுகா நெடியம் கிராமம் அருகே கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலத்தின் கீழ் பிணமாக தண்ணீரில் மிதந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளிப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷின் உடலை கைப்பற்றினர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ரமேஷின் மனைவி விஜயாவின் தம்பி கன்னியப்பன் பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதில் தனது மைத்துனரின் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரமேஷின் உடல் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் ரமேஷின் மரணம் மர்மமாக உள்ளது என்றும், சில தினங்களுக்கு முன் ரமேஷுக்கும் ஊராட்சி மன்ற தலைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது குறித்து புகார் அளிக்கப்பட்டு அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் ரமேஷ் மன உளைச்சலுக்கு ஆளாகி காணப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்து உடலை வாங்க மறுத்தனர்.

தகவல் கிடைத்ததும் திருத்தணி போலீசார் அங்கு சென்று சம்பவம் நடந்த இடம் வேறு என்பதால் நீங்கள் அங்கு சென்று முறையிடுங்கள் என்று கூறி அவர்களை சமாதானம் செய்து ரமேஷின் உடலை வாங்கும்படி கூறினர். அதன் பிறகு உறவினர்கள் ரமேஷின் உடலை வாங்கி கொண்டு சென்றனர்.

Next Story