நீர்வரத்து குறைவு எதிரொலி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்


நீர்வரத்து குறைவு எதிரொலி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x
தினத்தந்தி 7 Nov 2021 7:57 PM IST (Updated: 7 Nov 2021 7:57 PM IST)
t-max-icont-min-icon

நீர்வரத்து குறைந்ததால், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.


கூடலூர்:
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த உயரம் 152 அடி. இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. 
இந்தநிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, கடந்த மாதம் 23-ந்தேதி அணையின் நீர்மட்டம் 136 அடியை கடந்தது. இதைத்தொடர்ந்து நீர் மட்டத்தை உயர்த்த வேண்டாம் என கேரள அரசு வலியுறுத்தியது. 
விவசாயிகள் கொந்தளிப்பு
இதற்கிடையே இந்த அணையின் பாதுகாப்பு தொடர்பான ரிட் மனுக்கள் மீதான விசாரணையில் வருகிற 11-ந்தேதி வரை அணையின் நீர்மட்டத்தை 139.50 அடியாக பராமரிக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந்தேதி உத்தரவிட்டது. 
ஆனால் நீர் மட்டம் 138.70 அடியாக இருந்தபோதே கடந்த 29-ந்தேதி அணையில் இருந்து கேரள மந்திரிகள் முன்னிலையில் கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் இடுக்கி அணைக்கு செல்கிறது. அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. 
 தண்ணீர் திறப்பு நிறுத்தம்
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் அணைக்கு தண்ணீர் வரத்து குறைய தொடங்கி உள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் கேரளாவுக்கு மதகுகள் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. 
மேலும் தமிழகத்துக்கு திறந்துவிடப்படுகிற தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 138.50 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 10 கனஅடியில் இருந்து, 2 ஆயிரத்து 906 கன அடியாக குறைந்துள்ளது. 
இதேபோல் தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 305 கனஅடி திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று ஆயிரத்து 867 கன அடியாக குறைக்கப்பட்டது. 
கேரளாவுக்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் அணையின் நீர் மட்டத்தை 139.50 அடியாக உயர்த்தவும், வருகிற 11-ந்தேதிக்கு பிறகு நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story