அனாதை எனக்கூறி வேலைக்கு சேர்ந்து விவசாயி வீட்டில் நகை, பணம் திருடிய வாலிபர் போலீஸ் வலைவீச்சு
அனாதை எனக்கூறி வேலைக்கு சேர்ந்து நாடகமாடி, விவசாயி வீட்டில் நகை, பணம் திருடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடமலைக்குண்டு:
தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள வாலிப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் வனம் (வயது 41). விவசாயி. இவருக்கு சொந்தமாக தோட்டம் மற்றும் ஆடு, மாடுகள் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த 18 வயது வாலிபர் வாலிப்பாறைக்கு வந்தார்.
பின்னர் வனத்தை சந்தித்த அவர், தான் ஒரு அனாதை என்றும், பல்வேறு ஊர்களுக்கு சென்று கிடைக்கும் வேலைகளை செய்து வாழ்க்கை நடத்தி வருவதாகவும் கூறி அறிமுகம் ஆனார்.
மேலும் வனத்திடம், தோட்டத்தில் தனக்கு ஏதாவது வேலை கொடுக்குமாறும், அதற்கு சம்பளம் எதுவும் வேண்டாம், சாப்பாடு மட்டும் போதும் என்றும் கூறினார்.
இதையடுத்து அவர் மீது இரக்கப்பட்ட வனம் தனது வீட்டில் உள்ள ஆடு, மாடுகளை பராமரிக்கும் வேலையை அந்த வாலிபருக்கு கொடுத்தார். அதன்படி அந்த வாலிபர் கடந்த 4 நாட்களாக ஆடு, மாடுகளை பராமரித்து வந்தார்.
நகை, பணம் திருட்டு
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வனம் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் தங்களது தோட்டத்துக்கு சென்றனர். வீட்டில் அந்த வாலிபர் மட்டும் இருந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் தோட்டத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தனர். அப்போது வாலிபர் வீட்டில் இல்லை. மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளையும் காணவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த வனம் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.1,700-யை காணவில்லை. வீட்டில் வேலை செய்வதாக நாடகமாடி வாலிபர் நகை, பணத்தை திருடிவிட்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றது தெரியவந்தது.
போலீஸ் வலைவீச்சு
இதுதொடர்பாக வருசநாடு போலீஸ் நிலையத்தில் வனம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபர் மீது ஏற்கனவே மதுரை மற்றும் திருச்சி மாவட்ட போலீஸ் நிலையங்களில் 3 திருட்டு வழக்குகள் இருப்பதும், இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அந்த வாலிபர் மதுரை சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் இருந்ததும் தெரியவந்தது.
மேலும் வாலிபரின் தாயார் இறந்து விட்ட நிலையில், அவரது தந்தை வேறொரு திருமணம் செய்து கொண்டு மணப்பாறையில் வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story