தீபாவளி விடுமுறை முடிந்து வெளியூர்களுக்கு பயணம்: கிருஷ்ணகிரியில் கடும் போக்குவரத்து நெரிசல்-சுங்கச்சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன


தீபாவளி விடுமுறை முடிந்து வெளியூர்களுக்கு பயணம்: கிருஷ்ணகிரியில் கடும் போக்குவரத்து நெரிசல்-சுங்கச்சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன
x
தினத்தந்தி 7 Nov 2021 9:38 PM IST (Updated: 7 Nov 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய பொதுமக்களால் கிருஷ்ணகிரியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுங்கச்சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

கிருஷ்ணகிரி:
சொந்த ஊர் பயணம்
தீபாவளி பண்டிகை கடந்த 4-ந் தேதி கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் பல்வேறு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டன. இந்த விடுமுறை முடிந்து நேற்று பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினார்கள். கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் ஓசூர் பகுதியில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சென்றார்கள். விடுமுறை முடிந்து நேற்று அவர்கள் சொந்த ஊரில் இருந்து தாங்கள் வேலை பார்க்கும் பகுதிகளுக்கு திரும்பினார்கள். இதன் காரணமாக சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்தன. 
போக்குவரத்து நெரிசல்
இதனால் கிருஷ்ணகிரியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
மேலும் ஆவின் மேம்பாலம், ராயக்கோட்டை மேம்பாலம் ஆகிய இடங்களிலும் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதே போல கிருஷ்ணகிரி பஸ் நிலையத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அனைத்து பஸ்களிலும் படிகளில் நின்றவாறு பொதுமக்கள் பயணம் செய்ததை காண முடிந்தது.

Next Story