கொப்பரை உற்பத்தி பாதிப்பால் தோப்புகளில் ரூ.25 கோடி தேங்காய் தேக்கம்
கொப்பரை உற்பத்தி பாதிப்பால் தோப்புகளில் ரூ.25 கோடி தேங்காய் தேக்கம்
சுல்தான்பேட்டை
தொடர் மழை காரணமாக கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால் தோப்புகளில் ரூ.25 கோடி தேங்காய் தேக்கம் அடைந்துள்ளது.
கொப்பரை தேங்காய்
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை, கோட்டூர், நெகமம், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 4 கோடி தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் பறிக்கப்படும் தேங்காய்கள், இளநீர்கள் திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
மேலும் இந்த பகுதிகளில் எண்ணெய்க்காக கொப்பரை தேங்காய் உற்பத்தி செய்யப்பட்டு, ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், காங்கேயம், வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் விற்பனை கூடத்திலும் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உற்பத்தி பாதிப்பு
இந்த நிலையில் தற்போது கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தில் உள்ள சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள கொப்பரை உற்பத்தி களங்களில் கொப்பரை உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கொப்பரை உற்பத்தி நடைபெறாததால், தோப்புகளில் பறிக்கப்பட்ட தேங்காய்கள் ஆங்காங்கே களங்களில் குறித்து வைக்கப்பபட்டுள்ளன. இதனால் ரூ.25 கோடி தேங்காய் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
ரூ.25 கோடி தேங்காய் தேக்கம்
இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது:-
தொடர் மழை காரணமாக இளநீர் விற்பனை மற்றும் கொப்பரை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, காங்கேயம், வெள்ளக்கோவில் வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ கொப்பரை ரூ.103 ஆக உள்ளது.
ஆனால் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர் மழை பெய்து வருவதால் கொப்பரை உற்பத்திக்கு தேவையான வெப்பம் கிடைக்கவில்லை. இதனால் கொப்பரை உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக கொப்பரை உற்பத்தி களங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தோப்புகளில் ரூ.25 கோடி தேங்காய்கள் தேங்கி கிடக்கின்றன.
வேலை இழப்பு
தொடர் மழை காரணமாக மரத்தில் தேங்காய் பறிப்பவர்கள், தேங்காயை எடுத்து வாகனங்களில் ஏற்றுபவர்கள், டிரைவர்கள், தேங்காய்களை உடைத்து கொப்பரைக்காக காய போடுபவர்கள் என இந்த தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் மற்றும் இந்த தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுபவர்கள் என சுமார் ஒரு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
இவர்களுக்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும். மேலும் அரசு கொள்முதல் நிலையங்களில் குறைந்தபட்ச விலையாக அரசு கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.125 ஆக நிர்ணயம் செய்யவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story