திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது 55 பவுன் நகை பறிமுதல்


திண்டிவனம் பகுதியில்  தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது 55 பவுன் நகை பறிமுதல்
x
தினத்தந்தி 7 Nov 2021 10:32 PM IST (Updated: 7 Nov 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 55 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

திண்டிவனம், 

திண்டிவனம் பகுதியில் சமீபகாலமாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில், திண்டிவனம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மேற்பார்வையில், ரோஷணை இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து, கொள்ளையர்களை தேடி வந்தனர்.

நகைகளை விற்க முயற்சி

நேற்று முன்தினம் திண்டிவனம் பழைய நகராட்சி அருகில், ஒருவர் பழைய நகைகளை விற்பனை செய்ய முயன்று வருவதாக ரோஷணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில்,  போலீசார் அங்கு விரைந்து சென்று, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மலை கிராமத்தை சேர்ந்த மாயவன் மகன் செல்வராஜ் (வயது 39) என்பதும், இவர் திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

  இதையடுத்து செல்வராஜை போலீஸ் நிலையத்துக்கு பிடித்து சென்று விசாரித்தனர். அதில், திண்டிவனம் அய்யந்தோப்பு காமராஜர் நகரை சேர்ந்த கணேசன் (35) என்பவரின் வீட்டில் 13 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.  

இதேபோல்,  பாரதிதாசன் நகரில் கலைராஜ் (27) வீட்டில் 7½ பவுன்,  அதே பகுதியில் மற்றொரு வீட்டில் 5 பவுன்,  செஞ்சி ரோட்டில், சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரையை உடைத்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம்,  ஒலக்கூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9½ பவுன், பிரம்மதேசம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அப்பாசாமி நகரில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 33 பவுன் நகையை கொள்ளையடித்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். 

சொந்த தொழில் தொடங்க...

இவ்வாறு பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய செல்வராஜ்,  சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக  பணம் தேவைப்பட்டதால், திருட்டில் ஈடுபட்டதாக போலீசில் அவர் தெரிவித்தார். இதையடுத்து, அவரை ரோஷணை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து  ரூ.13 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 55 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Next Story