விளைநிலங்களுக்குள் புகுந்த தண்ணீர்
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்தது.
பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள நெல்லூரில் கருங்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் தண்ணீர் மூலமாக சுமார் 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தொடர் மழையின் காரணமாக, இந்த கண்மாய் நிரம்பி உள்ளது. மேலும் கண்மாய்க்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த நெல் விவசாயிகள் தங்களது நிலங்களில் நாற்று நடும் பணியை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று கண்மாயில் உள்ள மடை பகுதியில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகேயுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் சுமார் 300 ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கின.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் ஆர்.டி.ஓ. காசிசெல்வி, தாசில்தார் சரவணன், ஆத்தூர் மண்டல துணை தாசில்தார் அந்தோணிசாமி, மருதாநதி அணை உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், மருதாநதி அணை பொறியாளர் கண்ணன் ஆகியோர் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் கண்மாயில் ஏற்பட்ட உடைப்பை ஊழியர்கள் மூலம் சரிசெய்தனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளிடம் கேட்டபோது, ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து நடவு பணிகளை ெதாடங்கினோம். ஆனால் தற்போது மடையில் ஏற்பட்ட உடைப்பால் நிலங்கள் நீரில் மூழ்கிவிட்டன. எனவே விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story