4 நாட்களுக்கு முன்பு மாயமான பள்ளி மாணவன் கிணற்றில் பிணமாக மீட்பு கொலையா? போலீஸ் விசாரணை
4 நாட்களுக்கு முன்பு மாயமான பள்ளி மாணவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள துலுக்கபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன். இவரது மகன் செல்வகணபதி (வயது 16). இவர் மணக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
கடந்த 4-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற செல்வகணபதியை காணவில்லை. இதுகுறித்து செந்தில்முருகன் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பிணமாக மிதந்தார்
இந்த நிலையில், நேற்று மாலை துலுக்கபாளையம் ஏரிக்கரை அருகே உள்ள விவசாய கிணற்றில் செல்வகணபதி பிணமாக மிதப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக அவர்கள், திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, செல்வகணபதியின் உடலை மீட்டனர்.
உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். தொடாந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
கொலையா?
செல்வகணபதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story