கூடலூர், பந்தலூர் பகுதியில் நில பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குழு ஆய்வு


கூடலூர், பந்தலூர் பகுதியில் நில பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குழு ஆய்வு
x
தினத்தந்தி 7 Nov 2021 11:02 PM IST (Updated: 7 Nov 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர், பந்தலூர் பகுதியில் நில பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குழு ஆய்வு

கூடலூர்

கூடலூர், பந்தலூர் பகுதியில் நிலப் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குழு ஆய்வு நடத்தியது. தொடர்ந்து பொதுமக்களை சந்தித்து மனுக்கள் வாங்கினர். பின்னர் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து தீர்வு காணப்படும் என பேட்டியளித்தனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆய்வு

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் வருவாய் அல்லது வனத்துறைக்கு என முடிவு செய்யப்படாத சட்டப்பிரிவு- 17 நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அடிப்படை வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

 இதேபோல் தமிழ்நாடு தனியார் வனப்பாதுகாப்புச் சட்டம் உள்பட பல சட்டங்கள் அமலில் உள்ளன. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் உத்தரவின்பேரில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற பொது கணக்குக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் சட்டமன்ற துணைத்தலைவர் ராஜேஷ், காங்கிரஸ் கொறடா விஜயதரணி, பிரின்ஸ், கணேஷ், ராதாகிருஷ்ணன், ரூபி மனோகர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குழுவினர் நேற்று காலை 10.30 மணிக்கு கூடலூர் வந்தனர். அவர்களுக்கு கட்சியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மனுக்கள் அளித்தனர்

இதைத்தொடர்ந்து ஓவேலி பேரூராட்சி சூண்டி பகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மனுக்கள் அளித்தனர். 

அதில், சட்டப்பிரிவு- 17 நிலத்தில் பல தலைமுறையாக குடியிருந்து மற்றும் விவசாயம் செய்து வருவதால் அடிப்படை வசதிகளும் செய்து தருவதில்லை. எனவே நில பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று உள்ளது.

பார்வையிட்டு ஆய்வு

பின்னர் கூடலூர் அருகே மண்வயல், பாடந்தொரை மற்றும் பந்தலூர் தாலுகா பாட்டவயல், அய்யங்கொல்லி, தேவாலா பகுதிக்கு தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குழு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடம் மனுக்களைப் பெறறது. முன்னதாக கூடலூர் மண்வயலில் தமிழக காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூடலூர், பந்தலூர் தாலுகாவில் மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். ரயத்துவாரி மற்றும் ஜென்ம எஸ்டேட் நில சட்டங்கள் அமல்படுத்தவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவு 7035/81 -ன் நடைமுறைப்படுத்தவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் சட்டப்பிரிவு-17 வகை நிலத்தை 16 ஏ- ன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

 மக்களை பாதுகாப்பதற்காக மற்றும் அவர்களின் ஏற்றத்துக்காக மாவட்ட கலெக்டர் செயல்பட வேண்டும். கடந்த ஆட்சியில் மக்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டம் இன்று வரை தொடர்கிறது.

மக்கள் நலத்திட்டங்கள்

இதனால் பழுதடைந்த வீடுகளை புனரமைப்பதற்கு கட்டுமான பொருட்களை எடுத்து வந்தாலும் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கவேண்டிய நிலை உள்ளது. 1967- 69-ம் காலகட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கருத்திருமன் தலைமையிலான குழு இப்பகுதியில் ஆய்வு நடத்தி அப்போது முதலமைச்சராக இருந்த அண்ணாவிடம் அறிக்கை வழங்கியது.

 அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க இருந்த சமயத்தில் புற்றுநோயால் அண்ணா உயிரிழந்தார். அந்த அறிக்கை கிடப்பில் உள்ளது.
இதற்கிடையே தேர்தல் சுற்றுப்பயண சமயத்தில் இப்பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி கேட்ட கேள்விக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நில பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்திருந்தார். 

இதனால் மக்கள் அளித்த மனுக்களின் அடிப்படையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு முதல்-அமைச்சரை சந்திக்க உள்ளோம். அவர் நில பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story