கூடலூரில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,826 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கூடலூரில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,826 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கூடலூர்
கூடலூரில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,826 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்து உள்ளனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
நீலகிரி மாவட்டத்தில் இருந்து கூடலூர் வழியாக வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில், கூடலூர் வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் உள்ளிட்ட போலீசார் மற்றும் வட்ட வழங்கல் துறையினர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கூடலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது கூடலூரில் இருந்து கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொரப்பள்ளி வனத்துறை சோதனைச்சாவடி அருகே 38 மூட்டைகள் இருப்பதை கண்டனர். இதனால் சந்தேகமடைந்த வட்ட வழங்கல் துறையினர் மற்றும் போலீசார் அந்த மூட்டைகளை சோதனை செய்தனர்.
அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மூட்டைகளை எடுத்து வந்த நபர்கள் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தினர். ஆனால் அந்த மூட்டைகளுக்கு யாரும் உரிமை கோரவில்லை.
1,826 கிலோ பறிமுதல்
இதைத்தொடர்ந்து அவர்கள் 38 மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதில் 1,826 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. பின்னர் கூடலூர் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ரேஷன் அரிசி ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிமாநிலங்களுக்கு கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும், என்றனர்.
Related Tags :
Next Story