ரூ.4½ லட்சம் வெளிமாநில லாட்டரிகள் பறிமுதல்; 4 பேர் கைது


ரூ.4½ லட்சம் வெளிமாநில லாட்டரிகள் பறிமுதல்; 4 பேர் கைது
x

ராமநாதபுரத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து விற்பனை செய்து வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.4½ லட்சம் வெளிமாநில லாட்டரிகள், ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து விற்பனை செய்து வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.4½ லட்சம் வெளிமாநில லாட்டரிகள், ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

லாட்டரி சீட்டு விற்பனை

ராமநாதபுரம் நகரில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள், நம்பர் லாட்டரிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் அரசால் தடைசெய்யப்பட்ட இந்த விற்பனையை தடுக்குமாறும் மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் தீவிர குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில நாட்களாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 
இந்நிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரம் வண்டிக்காரத்தெரு மற்றும் கிடாவெட்டு ஊருணி எதிர்புறம் ஆகிய பகுதிகளில் உள்ள ஜெராக்ஸ் கடைகளில் தடைசெய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தினர். போலீசாரை கண்டதும் கடையில் இருந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். மீதம் இருந்த 4 பேரை மடக்கி பிடித்து கடையில் சோதனை நடத்தினர்.

ஜெராக்ஸ் எடுத்து விற்பனை

 இந்த சோதனையில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வெளிமாநில பெயர்களில் ஜெராக்ஸ் எடுத்து அதனை இங்குள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்து குலுக்கலில் பரிசு விழுந்தவர்களுக்கு பணம் வழங்கி வந்தது தெரிய வந்தது. இவர்களுக்கு சேலம், மதுரை, திருச்சி போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் இ-மெயிலில் லாட்டரி சீட்டுகளை அனுப்பி வைத்துவிடுவார்களாம். இவர்கள் அதனை கலர் ஜெராக்ஸ் எடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள வியாபாரிகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வந்துள்ளனர். 
முதல்நாள் விற்பனை செய்யப்படும் லாட்டரிகளுக்கு மறுநாளே குலுக்கலில் பரிசு விவரம் தெரிவிக்கப்பட்டு பணம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்த லாட்டரி விற்பனையில் பல லட்சம் ரூபாய் அளவில் லாபம் கிடைத்துள்ளது. இதனால் இந்த தொழிலை கும்பலாக சேர்ந்து செய்து பணம் சம்பாதித்து வந்துள்ளனர். குறைந்த முதலீட்டில் மக்களின் ஆசையை தூண்டி லாட்டரிகளை விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டி வந்துள்ளனர்.

4 பேர் கைது

இதனை தொடர்ந்து 2 ஜெராக்ஸ் கடைகளில் இருந்த ரூ.4 லட்சத்து 62 ஆயிரத்து 800 மதிப்பிலான 5 ஆயிரத்து 38 வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் அதனை விற்று வைத்திருந்த ரொக்கம் ரூ.69 ஆயிரத்து 720 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதவிர இந்த லாட்டரிகளை ஜெராக்ஸ் எடுப்பதற்கு பயன்படுத்திய கம்ப்யூட்டர், கலர் பிரிண்டர், 3 செல்போன்கள் உள்ளிட்டவைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 
இதுதொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து இளங்கோவடிகள் தெருவை சேர்ந்த ஆலடியான் மகன் வீரபெருமாள் (வயது34), செட்டியதெருவை சேர்ந்த ரெத்தினம் மகன் கோபிராஜன் (52), தர்மராஜ் மகன் பத்மநாபன் (47), வடக்குத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் செந்தில்குமார் (42) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய ரஜினி நாகராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பரமக்குடி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story