5,500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின


5,500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
x
தினத்தந்தி 7 Nov 2021 11:27 PM IST (Updated: 7 Nov 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், 5,500 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர், 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. குடியிருப்பு பகுதி களை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. தொடர் மழையால் குளம், குட்டைகள், ஆறு, ஏரிகள் நிரம்பி வருகின் றன.
அதேபோல் நெல், கத்தரி, வெண்டை, மிளகாய், வாழை, சம்பங்கி, சாமந்தி போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிட் டுள்ள வயல்களிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. சில இடங்களில் பயிர்கள் தெரியாத அளவுக்கு தண்ணீரில் மூழ்கி உள்ளன.

விவசாயிகள் கவலை

குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, புவனகிரி, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், சேத்தியாத்தோப்பு என பல்வேறு இடங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. சில இடங்களில் தேங்கி உள்ள தண்ணீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது பற்றி வேளாண்மை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் தண்ணீரில் மூழ்கி உள்ள பயிர்களை வேளாண்மை அலுவலர்கள் கணக்கெடுத்தனர்.

தண்ணீரில் மூழ்கின

அதன்படி மாவட்டத்தில் 5,500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து மழை பெய்தால் இவை அனைத்தும் அழுகி வீணாகும் நிலை ஏற்படும். சில இடங்களில் விவசாயிகள் தண்ணீரை வடிய வைத்து வருகின்றனர். ஆனால் தாழ்வான இடங்களில் உள்ள வயல்களில் தண்ணீரை வடிய வைக்க முடியாமல் உள்ளது. சேத விவரங்களை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கத்தரி, வெண்டை, மிளகாய், வாழை, வெற்றிலை என போன்ற தோட்டக்கலை பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இவற்றில் தண்ணீர் தேங்கி நின்றாலும் இது வரை பாதிப்பு இல்லை. பலத்த காற்று வீசினால் மட்டுமே தோட்டக்கலைத்துறை பயிர்கள் பாதிக்கும். வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். எத்தனை ஏக்கர் சாகுபடியில் தண்ணீர் தேங்கி உள்ளது என்ற விவரத்தை அந்தந்த உதவி இயக்குனர்கள் தலைமையில் அலுவலர்கள் கணக்கெடுத்து வருகிறார்கள் என்றார்.

போராட்டம்

புதுச்சத்திரம் பகுதியில் மழையால் ஏராளமான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஒரு வாரத்திற்கு மேலாக தண்ணீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் அழுகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் புதுச்சத்திரம் அருகே பூவாலை பகுதி விவசாயிகள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை  கையில் எடுத்து காண்பித்தப்படி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அப்போது அவர்கள் தங்களுக்கு உடனே நிவாரணம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் கூறுகையில்  கீழ் பரவனாற்றை அதிகாரிகள் தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இதனால் மழைவெள்ளம் சீராக ஆற்றில் செல்லமுடியாமல், அவை விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. எனவே வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story