விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
பரவலாக மழை
சிவகாசி,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. மேலும் அதிகபட்சமாக திருச்சுழியில்48.50 மில்லி மீட்டர் பதிவானது.
தொடர் மழை
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல ஆண்டுகளாக தண்ணீர் இன்றி வறண்டு கிடந்த கண்மாய், ஏரி, குளம், அணைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் 270 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருச்சுழி பகுதியில் 48.50 மில்லி மீட்டர் மழையும், குறைந்த பட்சமாக வத்திராயிருப்பு பகுதியில் 3.20 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
மற்ற ஊர்களில் பதிவான மழையின் விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- அருப்புகோட்டை-26, சாத்தூர்-42, ஸ்ரீவில்லிபுத்தூர்-40, சிவகாசி-9, விருதுநகர்-8, ராஜபாளையம்-10, காரியாபட்டி-28.20, பிளவக்கல்-3.40, வெம்பக்கோட்டை-6.50, கோவிலாங்குளம்-45.60. தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் 8 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
வருவாய்த்துறையினர்
மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகளுக்கு வரும் மழைநீர் குறித்து வருவாய்த்துறையினர் அவ்வபோது ஆய்வு செய்து வருகிறார்கள். சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கண்மாய்களில் தாசில்தார் ராஜ்குமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உதவியுடன் ஆய்வு செய்தார்.
ஆனையூர் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகம் இருப்பதால் அங்கு கரைகளை பலப்படுத்த தேவையான மணல் மூடைகளை தயார் செய்ய உத்தரவிட்டார்.
தீயணைப்புத்துறை
இதே போல் சிவகாசியில் உள்ள தீயணைப்புத்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். வழக்கமாக 8 மணி நேரத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் 10 தீயணைப்பு வீரர்கள் பணியில் இருப்பது வழக்கம். நேற்று சென்னையில் மழை பாதிப்பு அதிகம் இருந்ததை தொடர்ந்து தீயணைப்புத்துறை தலைமையின் அறிவிப்புக்கு இணங்க சிவகாசி தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்த 32 பேரும் தயார் நிலையில் நிலையத்தில் பணிக்காக காத்திருந்தனர்.
இது குறித்து நிலைய அதிகாரி பாலமுருகன் கூறியதாவது, மாநிலத்தில் பல்வேறு பகுதியில் மழை பாதிப்பு அதிகம் இருப்பதால் வெளிமாவட்டங்களுக்கு சென்று மீட்புபணியில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே அதற்காக அனைத்து தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். சிவகாசி தாலுகாவில் மழை பாதிப்பு அதிகம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
காரியாபட்டி
காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி பகுதியில் நேற்று முன்தினம் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த மழைகாரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விவசாயிகள் தங்களது நிலங்களில் நெல் பயிர்களை நட்டு உரம் இட்டு வருகின்றனர்.
பிசிண்டி, திருச்சுழி பகுதியில் பெய்த மழையால் குண்டாறு தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. குண்டாற்றில் செல்லும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் ஆனந்த குளியல் போட்டனர்.
அதே போல காரியாபட்டி, ஆவியூர், மீனாட்சிபுரம், மந்திரி ஓடை, முடுக்கன்குளம், நரிக்குடி, திருச்சுழி, வீரசோழன் போன்ற பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. குண்டாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து திருமங்கலம், காரியாபட்டி, திருச்சுழி, கமுதி, கடலாடி வழியாக தண்ணீர் வீணாக சென்று கடலில் கலந்து வருகிறது. எனவே, மழை காலங்களில் குண்டாற்றில் வரும் தண்ணீரை சேமிப்பதற்கு தடுப்பணை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள அத்திக் கோவில், பாப்பானத்தான் பெருமாள் கோவில், தலமலையான் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆறுகளில் அதிக அளவு நீர்வரத்து உள்ளது. இதன் காரணமாக வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக வருகின்றனர். அவர்கள் இப்பகுதியிலுள்ள ஆற்று வழியாக மலை பகுதிகளுக்குள் வெகுதூரம் சென்று அங்குள்ள நீர் வரத்து பகுதிகளில் குளிப்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது. எனவே நீர்வரத்து அதிகம் உள்ள பகுதிகளில் சுற்றுலா பயணிகள் சென்று குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், வனத்துறையினர் இப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story