15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய அய்யர்மலை ரத்தினகிரீசுவரர் கோவில் தெப்பக்குளம்
அய்யர்மலை ரத்தினகிரீசுவரர் கோவில் தெப்பக்குளம் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது.
குளித்தலை ,
குளித்தலை அருகே உள்ள அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற சிவத்தலமான ரெத்தினகிரீசுவரர் கோவில் உள்ளது. சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட மலையின் உச்சியின்மேல் அமைந்துள்ள இக்கோவிலின் சுவாமியை தரிசிக்க ஆயிரத்து 17 படிகள் உள்ளன. இந்த கோவிலின் எதிரே உள்ள பகுதியில் இக்கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் அமைந்துள்ளது. ரெத்தினகிரீசுவரர் கோவிலின் மலைமீது மழை பெய்யும் பொழுது அந்த மழைநீர் வடிகால் வழியாக இந்த தெப்பகுளத்திற்கு வந்து சேரும்.
இந்த தெப்பக்குளம் முழுவதும் தண்ணீர் நிரம்பினால் அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் சிறிய வடிகால் வழியாக அய்யர்மலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள குளத்திற்கு செல்லும். கடந்த 2006-ம் ஆண்டு இந்த தெப்பக்குளம் நிரம்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதன்பிறகு பல ஆண்டுகளாகியும் இந்த தெப்பக்குளம் நிரம்பவில்லை. இந்தநிலையில் அய்யர்மலை பகுதியில் கடந்த மாதம் முதல் தற்போதுவரை அவ்வப்போது பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக, இந்த தெப்பக்குளம் நேற்று முன்தினம் நிரம்பியது. மேலும் இதிலிருந்து தண்ணீர் நேற்று வெளியேற தொடங்கியது. சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தெப்பக்குளத்தில் தண்ணீர் நிறைந்து வழிந்தோடுவதை பார்த்த இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் தண்ணீர் வெளியேறும் இடத்தில் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி வழிபட்டனர். மேலும் பலர் இந்த நிகழ்வை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பக்குளம் நிறைந்து வழிவதால் அய்யர்மலை மட்டுமல்லாது குளித்தலை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் உள்பட பலர் இக்குளத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.
Related Tags :
Next Story