தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 8 Nov 2021 1:02 AM IST (Updated: 8 Nov 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

குப்பைத்தொட்டி வேறு இடத்துக்கு மாற்றப்படுமா?
தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே உள்ள சாலையின் நடுவே குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைத்தொட்டி நிறைந்து குப்பைகள் சாலையில் சிதறிக்கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், கால்நடைகள், நாய்கள் சிதறிக்கிடக்கும் குப்பைகளை தேடி அதிகளவில் வருகின்றன. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிதறிக்கிடக்கும் குப்பைகளை அகற்றவும், குப்பைத்தொட்டியை வேறு இடத்தில் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-சிவன், தஞ்சாவூர்
 மழைநீர் வடிகால் வசதி வேண்டும்
தஞ்சை மாவட்டம் புதுப்பட்டி கிராமம் வடக்கு தெருவில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. மேலும், அங்குள்ள வீடுகளையும் மழைநீர் சூழ்ந்துவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. தேங்கி கிடக்கும் நீரில் இருந்து விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் மழைநீர் வடிகால் வசதி செய்துதர வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், புதுப்பட்டி.
 பூங்கா சீரமைக்கப்படுமா?
 தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் காந்தி பூங்கா உள்ளது. இந்த பூங்காவை தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த பூங்கா தற்போது பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக பூங்காவில் உள்ள நீருற்று செயல்படாமல் உள்ளது. கழிவறைகள் பராமரிப்பின்றி கதவுகள் உடைந்த நிலையில் உள்ளது. மேலும், பூங்காவில் உள்ள குடிநீர் குழாயில் உள்ள உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகி செல்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காந்தி பூங்காவை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.        -வெங்கடேசன், கும்பகோணம்.
 சாலை சீரமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் உள்ள வயலூர் சாலையில் உள்ள சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்கள் மழைநீர் குளம் போல் தேங்கி விடுகின்றன. இதனால் இரவு நேரங்கள் வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி சிக்கிக்கொள்கின்றனர். மேலும், சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி வயலூர் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.                                  -ராமநாதன், கும்பகோணம்.
 போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர பலகைகள்
தஞ்சை பள்ளியக்கிரஹாரம் கடைதெருவில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியக்கிரஹாரம் கடைத்தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மீது அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி பள்ளியக்கிரஹாரம் கடைவீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.                  -அருள், தஞ்சாவூர்.
 விஷ வண்டுகள் அழிக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கோவிந்தநாட்டுச்சேரி புத்தூர் அம்மன்கோவில் தெருவில் ஒரு மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி உள்ளன.இவை அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளை அவ்வப்போது கடித்துவிடுகின்றன. இதனால் அந்த பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விஷ வண்டுகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.                         -பாக்கியராஜ், பாபநாசம்.
 தொற்றுநோய் பரவும் அபாயம்
தஞ்சையை அடுத்த மணக்கரம்பை பகுதியில் உள்ள அண்ணா நகரில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தின் அருகே கழிவுநீர் மற்றும் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அங்கன்வாடி மையத்தின் அருகே தேங்கி கிடக்கும் கழிவுநீர் மற்றும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.  -ஜெயக்குமார், மணக்கரம்பை.

Next Story