வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு
தஞ்சை மாநகராட்சி தேர்தலுக்கான ஆயத்தபணி நடைபெற்று வரும் நிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி தேர்தலுக்கான ஆயத்தபணி நடைபெற்று வரும் நிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சாதாரண நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாநகராட்சியில் அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் மாநில தேர்தல் ஆணையத்தின் உத்திரவின் படி கடந்த 1-ந் தேதி அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடப்பட்டது.
இதை அடிப்படையாக கொண்டு தஞ்சை மாநகராட்சியின் 51 வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 1,200 வாக்காளர்களுக்கு மிகாமல் வாக்களிக்கும் வகையில் 196 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஆண் வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடிகள் 81-ம், பெண் வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடிகள் 81-ம், அனைத்து வாக்காளர்களுக்குமான வாக்குச்சாவடிகள் 34-ம் அடங்கும்.
வரைவு வாக்குச்சாவடி பட்டியல்
வார்டு உறுப்பினர்களுக்கான சாதாரண தேர்தலுக்கான வாக்குச்சாவடி வரைவு பட்டியல் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஏதேனும் கருத்துரு வழங்க விரும்புகிறவர்கள் எழுத்து மூலம் மாநகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்கலாம். இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல்கள் மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும்.
இந்தநிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு படி தஞ்சை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்
இதேபோல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக செயற்பொறியாளர் ஜெகதீசன் (வார்டு 1 முதல் 10 வரை), இளநிலைப் பொறியாளர் பாபு (வார்டு-11 முதல் 20 வரை), இளநிலைப் பொறியாளர் ஆறுமுகம் (வார்டு-21 முதல் 30 வரை), உதவி பொறியாளர் ரமேஷ் (வார்டு-31 முதல் 40 வரை), உதவி செயற்பொறியாளர் (திட்டம்) ராஜசேகரன் (வார்டு-41 முதல் 51 வரை) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story