மேகதாது திட்ட பணிகளை விரைவாக தொடங்க வலியுறுத்தி மேகதாது முதல் பெங்களூரு வரை காங்கிரஸ் பாதயாத்திரை - சித்தராமையா பேட்டி
கர்நாடகத்தில் மேகதாது திட்ட பணிகளை விரைவாக தொடங்க வலியுறுத்தி மேகதாதுவில் இருந்து பெங்களூரு வரை காங்கிரஸ் பாதயாத்திரை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பாதயாத்திரை
மேகதாது திட்டத்திற்கு தமிழ்நாட்டினர் தேவையின்றி பிரச்சினை கிளப்புகிறார்கள். இந்த திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்த பிரச்சினையும் கிடையாது. பெங்களூருவுக்கு குடிநீர் வழங்குவதுடன் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்துவது தான் மேகதாது திட்டத்தின் நோக்கம். மேலும் அணையில் நீர் இருக்கும்போது, நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கும் உதவும்.
தமிழகத்தினர், அரசியல் நோக்கங்களுக்காக இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள். இதில் அவர்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. இது கர்நாடகத்தின் நிலரப்பரப்பிற்குள் செயல்படுத்தப்படும் திட்டம். காவிரி நீரை பெறும் உரிமை மட்டுமே தமிழகத்திற்கு உள்ளது. வெள்ளம் ஏற்படும்போது அந்த நீரை சேகரித்து வைத்து பயன்படுத்தினால் தமிழகத்திற்கு என்ன பிரச்சினை?.
தொந்தரவு கிடையாது
கடலில் வீணாக போய் சேரும் சேகரித்து வைக்கவே இந்த திட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது. மேகதாது திட்டத்தை செயல்படுத்த சட்டப்படி அனைத்து உரிமையும் அரசுக்கு உள்ளது. இந்த திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உள்பட எந்த தொந்தரவும் கிடையாது. அதனால் மேகதாது திட்டத்தை உடனே பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த திட்ட பணிகளை விரைவாக தொடங்க வலியுறுத்தி வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் மேகதாது பகுதியில் இருந்து பெங்களூரு வரை பாதயாத்திரை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். இன்னும் 2 நாட்களில் அதற்கான தேதியை அறிவிப்போம்.
தேர்தலை மனதில் வைத்தோ அல்லது வாக்குகளை பெறவோ இந்த பாதயாத்திரையை நாங்கள் மேற்கொள்ளவில்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, அரசு மேகதாது திட்டத்தை வகுத்து, திட்ட அறிக்கையை தயாரித்தது. மத்திய அரசு அனுமதி வழங்காததால் இந்த திட்ட பணிகளை தொடங்க முடியாத நிலை உள்ளது.
கன்னடர்களின் பக்கம்
கிருஷ்ணா மேல் அணை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக நாங்கள் முன்பு பாதயாத்திரை மேற்கொண்டோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த திட்டத்திற்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவு செய்வோம் என்று கூறினோம். அதன் பிறகு நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.50 ஆயிரம் கோடிக்கும் மேல் செலவு செய்தோம். இதில் அரசியல் கிடையாது. எங்களுக்கு விவசாயிகள் மற்றும் மக்களின் நலன் தான் முக்கியம்.
மேகதாது திட்ட விஷயத்தில் நான் நாட்டின் பக்கம் நிற்பதாக சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறியுள்ளார். நாங்கள் கர்நாடகம், கன்னடர்களின் பக்கம் இருக்கிறோம். மேகதாது திட்டத்தை விரைவாக தொடங்க வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
இந்த பேட்டியின்போது கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story