காலநிலை மாற்றம், எதிர்காலத்தில் பூமியின் இயல்பு தன்மையை மாற்றும் - இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேச்சு
காலநிலை மாற்றம் எதிர்காலத்தில் பூமியின் இயல்பு தன்மையை மாற்றும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியுள்ளார்.
பெங்களூரு:
பட்டமளிப்பு விழா
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல்லில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி.-கே) கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
எதிர்காலத்தில் காலநிலை மாற்றம் பூமியின் இயல்பு தன்மையை மாற்றும் சூழல் உள்ளது. இது நமது வாழ்க்கை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் உலகம் காலநிலை மாற்றம், இற்றை பேரிடர் சவாலை எதிர்கொண்டு வருகிறது. இந்த மாற்றம் ஏற்படும் சூழ்நிலையில் வருங்கால தலைமுறையினர், தங்களை நிலை நிறுத்திக்கொள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இளைஞர்களுக்கு வாய்ப்புகள்
தொழில்முனைவில் ஈடுபட என்ஜினீயரிங் படித்த இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன. புதிதாக தொழில் தொடங்க இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. நல்ல சம்பளம் வாங்கும் இளைஞர்கள் அந்த பணியில் இருந்து விலகி புதிய தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகிறார்கள். தற்சார்பு திட்டத்தின் கீழ் விண்வெளித்துறையிலும் நிறைய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
விண்வெளித்துறையில் சீர்திருத்தங்கள் செய்து அதன் மூலம் விண்வெளி தொழில்துறையை ஏற்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. இதன் மூலம் அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். படித்த இளைஞர்கள் மற்றவர்களை பார்த்து அதே போல் செய்ய வேண்டாம். உங்களுக்கு எதில் விருப்பம் உள்ளதோ அதை தேர்ந்தெடுத்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு கே.சிவன் பேசினார்.
தர்மேந்திர பிரதான் பேச்சு
மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பேசுகையில், "இந்த தொழில்நுட்ப கல்லூரி, தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்த கொள்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கியமான அம்சங்கள், நடப்பு கல்வி ஆண்டின் பாடத்தில் சேர்க்கப்படுகிறது. இந்த கல்லூரி பாதாமில் உள்ள ஈரப்பதத்தை கண்டறியும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. இது இந்த பகுதியில் உள்ள பாதாம் உற்பத்தியாளர்களுக்கு உதவும். உணவு பொருளை சமைக்க தயாராக இருக்கும் வகையில் பாதுகாத்து வைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குகிறார்கள்" என்றார்.
முன்னதாக பேசிய அந்த கல்லூரியின் இயக்குனர் உமாமகேஸ்வர், "கல்லூரியில் பட்டம் பெற்று செல்லும் மாணவர்கள், இந்த சமூகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும்" என்றார். விழாவில் 1,681 மாணவர்கள் இளநிலை பட்டமும், 125 மாணவர்கள் பி.எச்.டி. பட்டமும், 766 பேர் முதுநிலை பட்டமும் பெற்றனர்.
Related Tags :
Next Story