கர்நாடகத்தில் இன்று முதல் மழலையர் பள்ளிகள் திறப்பு
கர்நாடகத்தில் 20 மாதங்களுக்கு பிறகு மழலையர் பள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படுகின்றன.
பெங்களூரு:
மழலையர் பள்ளிகள்
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. கொரோனா குறைய ஆரம்பித்ததை அடுத்து முதலில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர் 6 முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன்பிறகு கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளை உள்ளடக்கிய மழலையர் பள்ளிகள் 8-ந் தேதி திறக்கப்படும் என்று கர்நாடக அரசு கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி கர்நாடகத்தில் 20 மாதங்களுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
சமூக இடைவெளி
இந்த மழலையர் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு மதியம் வரை மட்டுமே வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், கட்டாயம் குழந்தைகள் முகக்கசவம் அணிய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. மழலையர் குழந்தைகளை வகுப்புகளுக்கு வரவேற்க பள்ளி ஆசிரியர்கள் தயாராகியுள்ளனர்.
அதனால் குழந்தைகள் பள்ளிகளுக்கு வர ஆர்வமாக உள்ளனர். மழலையர் பள்ளிகள் திறப்புடன் கர்நாடகத்தில் அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் செயல்பட தொடங்கிவிடும். அதனால் அடுத்த ஆண்டு (2022) தேர்வுகள் வழக்கமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு இன்றி அனைவரையும் தேர்ச்சி பெற வைப்பது உள்ளிட்ட எந்த முடிவும் இந்த ஆண்டு கடைப்பிடிக்கப்படாது என்று கூறப்படுகிறது.
அறிகுறி தென்படவில்லை
கொரோனா 3-வது அலை தாக்குவதற்கான எந்த அறிகுறியும் இதுவரை தென்படவில்லை. அதனால் பள்ளிகளின் செயல்பாடுகளில் எந்த சிக்கலும் இருக்காது என்றே சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து வரும் நாட்களில் தான் கொரோனா 3-வது அலை குறித்து தெரியவரும். ஆயினும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story