பேரன் கண்எதிரே தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட முதியவர்
பேரன் கண்எதிரே தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட முதியவர்
கெங்கவல்லி, நவ.8-
கெங்கவல்லி அருகே சுவேத நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பேரன் கண் எதிரே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முதியவரை தீயணைப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திடீர் வெள்ளப்பெருக்கு
கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 75). இவர் நேற்று காலை தனது பேரன் சிலம்பரசனுடன் (15), மணக்காடு பகுதியில் உள்ள விவசாய காட்டுக்கு சென்றார். அங்கு விவசாய வேலை முடிந்து ஆறுமுகம் தனது பேரனுடன் மதியம் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
வழியில் சுவேத நதியில் குறைந்த அளவே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் பேரனுடன், ஆறுமுகம் ஆற்றில் இறங்கி நடந்து வந்தார்.
பாதி தூரம் ஆற்றில் கடந்து வந்த நிலையில், திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் நிலைதடுமாறிய ஆறுமுகம் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அதே நேரத்தில், அவருடைய பேரன் சிலம்பரசன் தட்டுத்தடுமாறி கரையில் ஏறி ஒதுங்கி விட்டார்.
முதியவரை ேதடும் பணி
அவர் தனது கண் எதிரே தாத்தா ஆறுமுகம் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதை கண்டு காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் ஆறுமுகத்தை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர் நீ்ண்டதூரம் இழுத்து செல்லப்பட்ட நிலையில், கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வேலுமணி தலைமையிலான படைவீரர்கள் சுவேதநதியில் முதியவர் ஆறுமுகத்தை தேடினர். அங்குள்ள முள்புதர்களிலும் அவர் சிக்கி உள்ளாரா? என்பது குறித்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story