பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது


பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது
x
தினத்தந்தி 8 Nov 2021 11:56 AM IST (Updated: 8 Nov 2021 11:56 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் மழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுச்சேரி, நவ.
புதுச்சேரியில் மழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கவர்னர் ஆய்வு
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாற்ற சுகாதாரத்துறையின் மூலமாக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் முத்தியால்பேட்டை தேபசியன்பேட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வீடு தேடிச்சென்று தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மதியம் அந்த பகுதிகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்டார். அப்போது அங்கு சிலர், நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருப்பதால் கொரோனா தடுப்பூசி போடவில்லை என்று கூறினர்.
பரிசோதனை செய்தார்
உடனே மருத்துவரான கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தடுப்பூசி போடாமல் இருந்தவர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்தார். பின்னர் அவர்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் எந்த பக்க விளைவும் வராது, நீங்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். 
கவர்னரின் அறிவுறுத்தலை தொடர்ந்து ஒரே தெருவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தொடர்ந்து கவர்னர்  கருவடிக்குப்பம் பகுதியில் நடந்த தடுப்பூசி முகாமையும் ஆய்வு செய்தார்.
பின்னர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தவறான புரிதல்
புதுவையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பற்றிய கணக்கெடுப்பை நடத்தியிருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த வீடுகளில் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி குறித்து தவறான புரிதலோடு இருக்கிறார்கள். 
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இருப்பவர்கள் கொரோனா தடுப்பூசி போட தயங்கினார்கள். நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக கொரோனாவால் பாதிக்கப்படலாம் என்பதால் அவர்கள் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நாம் தற்போது அபாயகரமான சூழ்நிலையில் இருக்கிறோம். சீனா போன்ற நாடுகளில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. அதனால் தயக்கம் இல்லாமல் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கவர்னர்கள் மாநாடு
புதுச்சேரியில் சுகாதாரத்துறை சிறப்பு முகாம்களை நடத்தியும், இன்னும் 1½ லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. அவர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நம்மிடம் போதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. எதிர்காலத்தில் கொரோனா எந்த உருவில் நம்மை தாக்கும் என்று கூற முடியாது. நான் புதுச்சேரி கவர்னராக மட்டுமல்லாமல் ஒரு மருத்துவராகவும் இதைக் கூறுகிறேன்.
இந்த மாதம் 10, 11-ந் தேதிகளில் டெல்லியிலும், 14 -ம் தேதி திருப்பதியிலும் கவர்னர்கள் மாநாடு நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள்ள இருக்கிறேன். அந்த பணிகளுக்கு இடையிலும் அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காக என்னுடைய நேரத்தை செலவழிக்கிறேன். வரும் காலத்தில் எந்த திட்டத்திற்கு வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆவணம் கேட்கப்படலாம். அதற்காக அப்போது மக்கள் வருத்தப்பட வேண்டாம் என்பதற்காக கூறுகிறேன். பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
அரசு தயார்
புதுச்சேரியில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. இன்னும் கடுமையான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூ றினார்.

Next Story