வேளச்சேரி, மீண்டும் வெள்ளச்சேரியானது; நிரந்தர தீர்வு என்ன? குடியிருப்புவாசி பேட்டி


வேளச்சேரி, மீண்டும் வெள்ளச்சேரியானது; நிரந்தர தீர்வு என்ன? குடியிருப்புவாசி பேட்டி
x
தினத்தந்தி 8 Nov 2021 2:12 PM IST (Updated: 8 Nov 2021 2:12 PM IST)
t-max-icont-min-icon

வேளச்சேரி பகுதி மீண்டும் வெள்ளச்சேரியானது. இதற்கு நிரந்தர தீர்வு என்ன? என்று அந்த பகுதி குடியிருப்புவாசி ஒருவர் கருத்து தெரிவித்து உள்ளார்.

வெள்ளச்சேரியானது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாதாரணமாக பெய்யும் மழைக்கே வேளச்சேரி பகுதிகளில் தண்ணீர் தேங்கும். சென்னையில் நேற்று இடைவிடாமல் பெய்த அதிகனமழை காரணமாக வேளச்சேரி மீண்டும் வெள்ளச்சேரியாகவே காட்சியளித்தது.

வேளச்சேரி ராம்நகர், விஜயாநகர், பிள்ளையார் கோவில் தெரு, 100 அடி சாலை, ஏ.ஜி.எஸ். காலனி, எம்.ஜி.ஆர். நகர் உள்பட சில பகுதிகளில் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிட்டன. வீடுகளுக்குள் இருந்த பொருட்களை எல்லாம் உயரமான பகுதியில் மக்கள் பாதுகாப்பாக கொண்டு வைத்தனர். சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வந்ததால் மக்கள் சிரமத்துக்குள்ளானார்கள்.

2015-ம் ஆண்டு வெள்ளத்தின்போது வேளச்சேரி பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் சென்ற மழைநீரால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் அனைத்தும் மூழ்கின. அதன்பிறகு, சென்னையில் எப்போது மழை பெய்தாலும், வேளச்சேரி பகுதி மக்கள், வேளச்சேரி பாலத்தின் ஓரத்தில் வரிசையாக தங்களுடைய நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். நேற்று கனமழை பெய்ததை தொடர்ந்து வேளச்சேரி பாலத்தில் வாகனங்கள் வரிசைக்கட்டி நிறுத்தி வைத்திருந்ததையும் பார்க்கமுடிந்தது.

பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ரேஷன் கடையில் தண்ணீர் சூழ்ந்ததால், அங்கிருந்த அரிசி உள்பட மளிகை பொருட்கள் அனைத்தையும் மாற்று இடத்துக்கு கொண்டு செல்லும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

தண்ணீர் தேங்கியது இல்லை

வேளச்சேரி பகுதி ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வெள்ளச்சேரியாக மாறி குடியிருப்புவாசிகளுக்கு பெரும் துன்பத்தை அளித்து வருகிறது. வேளச்சேரி பகுதி, வெள்ளச்சேரியாக மாறாமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு என்ன? என்பது குறித்து வேளச்சேரி மேட்டு தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவர் கூறியதாவது:-

நாங்கள் எங்கள் தாத்தா காலத்துக்கு முன்பு இருந்தே வேளச்சேரி மேட்டுத் தெருவில் பூர்வீகமாக குடியிருந்து வருகிறோம். எங்கள் பகுதி அப்போதே கிராமமாக இருந்த பகுதியாகும். அதனால் அங்கு எந்த மழைக்காலத்திலும் தண்ணீர் தேங்கியது இல்லை.

விளை நிலங்கள்

அதே நேரத்தில் தற்போதைய வேளச்சேரி ராம் நகர், விஜய நகர், சீனிவாசா நகர், பத்மாவதி நகர், வ.உ.சி.நகர், கல்கி நகர் உள்ளிட்ட பகுதிகள் வேளச்சேரி ஏரியின் நீர்ப்பாசன விளைநிலங்களாக இருந்த பகுதி ஆகும். அந்த காலத்தில், வேளச்சேரி ஏரியில் உள்ள தண்ணீரானது இந்த விளைநிலங்கள் வழியாக பாய்ந்து சென்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு சென்று அங்கிருந்து ஒத்தியம்பேட்டை வழியாக கடலில் கலக்கும். இது தான் இயல்பு. ஆனால் தற்போதைய காலத்தில் விளை நிலங்கள் அனைத்தும் குடியிருப்புகளாக மாறிவிட்டதால், மழைகாலத்தில் அங்கு மழைநீர் தேங்குகிறது.

ஆக்கிரமிப்புகள்

இது ஒருபுறம் இருக்க, வேளச்சேரி ஏரியே தற்போது ஆக்கிரமிப்புகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால், மழைகாலத்தில் வேளச்சேரி ஏரியில் சேமிக்கப்பட வேண்டிய பெருமளவு தண்ணீர் இந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுகிறது. இந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய் வழியாக சென்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைய வேண்டும். ஆனால், அங்கும் ஆக்கிரமிப்புகள் நிறைந்து காணப்படுவதால் இந்த மழைநீர் அங்கும் செல்ல முடியவில்லை.

ஆழப்படுத்த வேண்டும்

இதனால் தான் வேளச்சேரியானது மழை காலங்களில் வெள்ளச்சேரியாக மாறுகிறது. இதற்காக கோடிக்கணக்கில் ரூபாய் செலவழித்து கால்வாய்க்கள் அமைப்பதால் எந்த பயனும் இல்லை. வேளச்சேரி ஏரி மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை முறையாக ஆழப்படுத்தினால் மட்டுமே வேளச்சேரி வெள்ளச்சேரியாக மாறாமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story