‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 8 Nov 2021 2:46 PM IST (Updated: 8 Nov 2021 2:46 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மக்களை பரிதவிக்க வைத்த மழைவெள்ளம்

சென்னையில் பெய்த கனமழையால் பல இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகள் மழைவெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் இரவு பெய்த மழையே சென்னை மக்கள் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது.

மழை தொடர்ந்தால் சென்னை கதி என்ன ஆகும்? என்று தெரியவில்லை. எனவே தாழ்வான இடங்களில் சூழ்ந்துள்ள தண்ணீரை போர்க்கால அடிப்படையில் அகற்றிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சமூக நலக்கூடங்கள், திருமண மண்டபங்களில் தங்க வைக்க ஏற்பாடு வேண்டும். மழைநீருடன் கழிவுநீருடன் கலந்து ஓடுவதால் சுகாதார சீர்கேடு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே மழைக்கால மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்.

-சமூக ஆர்வலர்கள்.





கால்வாய் கரையோரம் சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

சென்னை திருவொற்றியூர் கார்கில் நகர், வெற்றி நகர், ராஜாஜி நகர் பகுதியில் பக்கிங்காம் கால்வாய் அமைந்துள்ள சாலை வழியாக மாநகர பஸ்கள், கண்டெய்னர் போன்ற கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலை அகலம் குறைவாக இருக்கிறது. எனவே மக்கள் பாதுகாப்பு கருதி கால்வாய் கரையோரம் சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வாகன ஓட்டிகள், பொதுமக்கள், திருவொற்றியூர்.

இயங்காத சிக்னலால் ஏற்படும் சிக்கல்கள்

சென்னை கொளத்தூர்- ரெட்டேரி மேம்பாலம் கீழ் போக்குவரத்து சிக்னல் இருந்தும் இயங்காமல் இருக்கிறது. இதனால் நாலாபுறமும் வாகனங்கள் கட்டுப்பாடு இன்றி வருகின்றன. சில நேரங்களில் சிறு, சிறு விபத்துகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகின்றன. யார் முதலில் செல்வது என்பதில் வாகன ஓட்டிகள் இடையே வாய்த்தகராறும் ஏற்படுகிறது. எனவே இந்த சிக்னலை இயக்கினால் இது போன்ற தேவையற்ற சிக்கல்கள் ஏற்படாது.

- விநாயகபுரம் கிளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி.



மின்கம்பம் மோசம்

திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் சந்தோஷ்நகர் 2-வது தெருவில் (கேம்ப் ரோடு அருகில்) உள்ள மின்கம்பம் மிக மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக மின் கம்பத்தின் அடிப்பகுதி பெயர்ந்து போயிருக்கிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் இந்த மின்கம்பத்தின் உறுதித்தன்மை குறித்து கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பொதுமக்கள், சந்தோஷ்நகர்.

சாலையை செப்பனிட வேண்டும்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சோகண்டி கிராமம், அடவிளாகம், வீரகுப்பம், மோசிவாக்கம், கண்டிகை, அகரம் உள்பட கிராமங்கள் வழியாக செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஜல்லி கற்கள் பெயர்ந்து கரடு, முரடாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைவதுடன், வாகனங்கள் பழுதடைகின்றன.

எனவே இந்த சாலையை செப்பனிட்டு தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.

- வாகன ஓட்டிகள்.

6 கி.மீ. தொலைவில் ரேஷன் கடை

செங்கல்பட்டு மாவட்டம் அமிஞ்சகரை ஊராட்சியில் உள்ள மதுரா ரெட்டிப்பாளையம் பகுதியில் நரிக்குறவர் மக்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க வீராபுரம் பகுதிக்கு வர வேண்டி உள்ளது. சுமார் 6 கி.மீ. தொலைவுக்கு வயல்வெளி வரப்பில் நடந்து மிகவும் சிரமப்பட்டு பொருட்களை வாங்கி செல்லும் நிலை உள்ளது. எனவே மதுரா ரெட்டிப்பாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நரி குறவர் மக்கள்.

காட்சி பொருளான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம் ஆலத்தூர் சிட்கோ ஜெ.ஜெ.நகர் பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் இதுவரையில் இங்கு தண்ணீர் நிரப்படாததால், குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராமல் உள்ளது. காட்சி பொருளாக இருக்கும் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எப்போது பயன்பாட்டுக்கு வரும்.

-பொதுமக்கள், திருப்போரூர்.

ஆபத்தான நிலையில் மின்கம்பம்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமறைநகர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மின்கம்பம் சாய்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

மறைமலைநகர் மின்வாரிய அலுவலகத்தின் சற்று தொலைவிலேயே இந்த நிலைமை இருக்கிறது. அசம்பாவித சம்பவங்கள் நேரிடும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.பிரபாகரன், சமூக ஆர்வலர்.



கழிவுநீர் கால்வாய் வசதி தேவை

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சி 1-வது வார்டுக்குபட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால்​ பெருகிவரும் குடியிருப்புகளுக்கு மத்தியில் கழிவுநீர் தேங்கி வருகிறது. இதனால் துர்நாற்றத்துடன் நோய்கள் பரவும் அபாயமும் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பொதுமக்கள், ஆதனூர்.

தெருவிளக்கு அமைக்கப்படுமா?

காஞ்சீபுரம் மாவட்டம் நத்தப்பேட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் பாதையில் தெருவிளக்கு மின் கம்பங்கள் இல்லை. மேலும் இப்பகுதியில் பாம்பு போன்ற கொடிய விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் மிகுந்த அச்சத்துடன் சென்று வர வேண்டி உள்ளது. எனவே இப்பகுதியில் தெளிவிளக்கு அமைத்து தரப்படுமா?

- பொதுமக்கள், நத்தப்பேட்டை.


Next Story