திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது
x
தினத்தந்தி 8 Nov 2021 5:30 PM IST (Updated: 8 Nov 2021 5:30 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
கந்தசஷ்டி திருவிழா
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4-ந் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் 5-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ெதாடர்ந்து கோவில் மூலவர் மற்றும் சண்முகருக்கு உச்சிகால தீபாராதனை நடந்த பின் யாகசாலையில் தீபாராதனை நடந்தது. 
தங்க சப்பரத்தில் சுவாமி
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதி முன்பு வந்தார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு தீபாராதனை நடந்தது.
பின்னர் மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. அதன்பிறகு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் யாகசாலைக்கு எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
இன்று சூரசம்ஹாரம்
6-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனையும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கோவில் கடற்கரை நுழைவுவாயில் பகுதியில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 
முதலில் மாயையே உருவான யானை முகனையும், பின்னர் கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரனையும், தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மனையும் சுவாமி ஜெயந்திநாதர் வேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்கிறார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வரும் சூரபத்மனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி ஆட்கொள்கிறார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் சுவாமி வைத்துக்கொள்கிறார். 
பக்தர்களுக்கு அனுமதி இல்லை
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 2-வது ஆண்டாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. எனவே, வழக்கமாக பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் சூரசம்ஹாரம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிமையாக நடக்கிறது. 
இதற்காக சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை நுழைவுவாயில் பகுதியில் 3 பக்கமும் தகரத்தினால் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கடற்கரை வழியாக பக்தர்கள் வரமுடியாதபடி நாழிக்கிணற்றில் இருந்து கடல்நீர் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் போலீசார் கண்காணிக்க வசதியாக, கண்காணிப்பு கோபுரங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதுதவிர போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
திருக்கல்யாணம்
7-ம் திருநாளான நாளை (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து காலை 9 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து, மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்றைய தினமும் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்யவோ, நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கோ அனுமதி இல்லை.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story