தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆதரவாளர் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே நடந்த மோதலில் 3 பேர் காயம் அடைந்தனர்


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆதரவாளர் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே நடந்த மோதலில் 3 பேர் காயம் அடைந்தனர்
x
தினத்தந்தி 8 Nov 2021 6:55 PM IST (Updated: 8 Nov 2021 6:55 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆதரவாளர் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே நடந்த மோதலில் 3 பேர் காயம் அடைந்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆதரவாளர் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே நடந்த மோதலில் 3 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டெர்லைட்
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை கடந்த 3½ ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது. இதனை திறக்க வலியுறுத்தி பலர் மனு கொடுத்து வருகின்றனர். 
இந்த நிலையில் பாத்திமாநகரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மனு கொடுத்த பெண்கள் குறித்து அந்த பகுதியை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. 
இருதரப்பினர் மோதல்
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தரப்பில் தோமையார் நகர் 8-வது தெருவை சேர்ந்த கெபிஸ்டன் (வயது 25) மற்றும் ஆதரவு தரப்பில் பாத்திமாநகரை சேர்ந்த ஜூடு ராஜேஷ் (41), ஜேசுராஜா (40) ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து ஜூடு ராஜேஷ் அளித்த புகாரின்பேரில், கெபிஸ்டன் மீதும், கெபிஸ்டன் அளித்த புகாரின்பேரில் ஜூடு ராஜேஷ், ஜேசுராஜா, இந்திரா, ஸ்மைலா, ஷாலினி, பிருந்தா ஆகிய 6 பேர் மீதும் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் மனு 
இந்த நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் கெபிஸ்டன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாத்திமாநகரை சேர்ந்த மக்கள் செல்வராஜ் தலைமையிலும், நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் தலைமையிலும், கலெக்டர் அலுவலகத்தில் தனித்தனியாக மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் கெபிஸ்டனை வீடு புகுந்து தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.
இதையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story