சிறுவனை கொலை செய்த கல்லூரி மாணவர் கைது
நத்தம் அருகே கழுத்தை அறுத்து சிறுவனை படுகொலை செய்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
செந்துறை:
சிறுவன் படுகொலை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோட்டையூர் சின்னையம்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். அவருடைய மகன் ஹரிகரதீபன் (வயது 6). இவன், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் இவன், கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டான். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் ரூக்கி வரவழைக்கப்பட்டது.
அது, சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தப்படி, அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் அஜய்ரத்தினம் (19) என்பவரின் வீட்டுக்கு சென்றது. இதனையடுத்து அஜய்ரத்தினத்தை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
கல்லூரி மாணவர் கைது
விசாரணையில் ஹரிகரதீபனை, கொலை செய்ததை அஜய்ரத்தினம் ஒப்பு கொண்டார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கொலையான ஹரிஹர தீபனின் சித்தப்பா மகன் தான் அஜய் ரத்தினம். இவர், தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கைதான அஜய்ரத்தினம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
11-ம் வகுப்பு படிக்கிற என்னுடைய பெரியப்பா மகளை, மகேந்திரன் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார். இவர்களது புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்தேன். இது தொடர்பாக என்னை, என்னுடைய குடும்பத்தினர் கண்டித்தனர்.
இதற்கிடையே மகேந்திரனுக்கு, வேறு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இது தொடர்பான புகைப்படத்தையும் இணையதளத்தில் வெளியிட்டேன். இதனால் என் மீது சைபர் கிரைம் போலீசில் மகேந்திரன் புகார் அளித்தார்.
அறிவுரை வழங்கியதால்...
விசாரணைக்கு சென்ற நான் தவறை ஒப்பு கொண்டேன். இரு வீட்டாரும் சென்று சமரசம் பேசி வழக்கை முடித்து வைத்தனர். இச்சம்பவம் எனக்கு மன உளைச்சலையும், அவமானத்தையும் ஏற்படுத்தியது. இரவில் தூக்கம் இன்றி தவித்து வந்தேன்.
மேலும் இது தொடர்பாக என்னுடைய பெரியப்பா ராமகிருஷ்ணன் எனக்கு அறிவுரை வழங்கினார். இது எனக்கு பிடிக்கவில்லை. இதனால் அவரை பழிவாங்கும் நோக்கத்தில், அவருடைய மகனை கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.
இவ்வாறு அஜய்ரத்தினம் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
----------
Related Tags :
Next Story