திருவள்ளூர் மாவட்டத்தில் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்


திருவள்ளூர் மாவட்டத்தில் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்
x
தினத்தந்தி 8 Nov 2021 8:12 PM IST (Updated: 8 Nov 2021 8:12 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது.

பலத்த மழை

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஈக்காடு, புட்லூர், செவ்வாப்பேட்டை, அரண்வாயல், திருமழிசை, வெள்ளவேடு, மணவாளநகர், ஒண்டிகுப்பம், பட்டரை, மேல்நல்லாத்தூர், கீழ்நல்லாத்தூர், திருப்பாச்சூர், கடம்பத்தூர், சத்தரை, பேரம்பாக்கம் நரசிங்கபுரம், குமாரச்சேரி, கிளாம்பாக்கம், திருவாலங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் மாலை வரை விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொன்னேரி அடுத்த மெதூர் ஊராட்சியில் அடங்கிய பாரதிநகரில் வடகிழக்கு பருவமழையால் அண்ணாதுரை என்பவரது வீடு இடிந்து விழுந்தது சேதம் அடைந்தது.

கல்பாக்கம்

மீஞ்சூர் அடுத்த கல்பாக்கம் கிராமத்தில் மழை நீர் தேங்கி உள்ளது. அங்குள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. இதை அறிந்த கல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பிரியங்கா துரைராஜ் சம்பவ இடத்திற்கு சென்று கொட்டும் மழையில் அந்த பகுதி மக்களை மீட்டு அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டார். அப்போது ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பொன்னி முத்துக்குமார், ஒன்றிய கவுன்சிலர் ராஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி சிப்காட்டையொட்டி புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியை சேர்ந்த பகுதியாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சில தொழிற்சாலைகள் நீர் வரத்து கால்வாய்களை ஆக்கிரமித்து இருப்பதாலும், முறையாக மழைநீர் வெளியேற வழிவகை செய்யாததாலும் இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது.

சிப்காட் தொழிற்பேட்டையில் இருந்து வந்த இத்தகைய மழைநீர் வீடுகளில் புகுந்ததால் இரவு முழுவதும் கண்விழித்து இருந்த குடியிருப்பு வாசிகள் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள்.

மேலும் சாக்கடை மற்றும் சிப்காட் கழிவு கலந்த இந்த மழைநீரில் பாம்பு மற்றும் விஷபூச்சிகள் வந்ததால் குடியிருப்புவாசிகள் பெரும் அச்சம் அடைந்தனர். மாற்று ஏற்பாடு இன்றி தவித்த வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வாசிகளுக்கு புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி சுகுமாரன் தலைமையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மழை நீரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சமுதாயக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் புகுந்த மழைநீரானது, பாலகிருஷ்ணாபுரம் வழியாக கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலைக்கான மழைநீர் கால்வாயில் செல்லும்படியாக மாற்று எற்பாட்டை புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி நிர்வாகம் செய்தனர். இதனையடுத்து குடியிருப்பில் புகுந்த மழைநீர் நேற்று இரவு ஓரளவு வடிந்தது.


Next Story