கீரமங்கலம் பகுதியில் கனமழை பெய்தும் கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள பெரியாத்தாள் ஏரி நிரம்பவில்லை வரத்து வாரிகள் மராமத்து இல்லாததால் அவலம்
கீரமங்கலம் பகுதியில் கன மழை பெய்த போதும் பல கிராமங்களுக்கு நிலத்தடி நீரின் ஆதாரமாக உள்ள பெரியாத்தாள் ஏரி நிரம்பவில்லை. வரத்து வாய்க்கால்கள் மராமத்து இல்லாததால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கீரமங்கலம்:
பெரியாத்தாள் ஏரி
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றியுள்ள சுமார் 10 கிராமங்களுக்கு நிலத்தடிநீர் ஆதாரமாக உள்ளது சேந்தன்குடி பெரியாத்தாள் ஏரி. சேந்தன்குடி, நகரம், கீரமங்கலம் ஆகிய ஊர்களுக்கு மத்தியில் சுமார் 2 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் தண்ணீர் நிறைந்தால் அருகில் உள்ள சேந்தன்குடி, நகரம், கீரமங்கலம், செரியலூர், பனங்குளம், குளமங்கலம், மாங்காடு உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில் நிலத்தடி நீர் மேலே இருக்கும். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ஏரி நிறைந்து பல கிராமங்களின் நிலத்தடி நீரை பாதுகாத்துள்ளது. ஆனால் அதன் பிறகு பெரியாத்தாள் ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை அதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தற்போது 500 அடிக்கு கீழே சென்றுள்ளது.
மராமத்து இல்லாத வாரிகள்
பெரியாத்தாள் ஏரிக்கு கொத்தமங்கலம் அம்புலியாறு அணைக்கட்டில் இருந்து தனி கால்வாய் மூலம் தண்ணீர் வந்து இடையில் உள்ள சில சிறிய குளங்களுக்கும் கடைசியில் பெரியாத்தாள் ஏரிக்கும் தண்ணீர் வந்துள்ளது. ஆனால் பல வருடங்களாக அணைக்கட்டில் இருந்து பெரியாத்தாள் ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாய் மராமத்து செய்யப்படாமல் தூர்ந்து கிடக்கிறது. கனமழை காலங்களில் மட்டும் தண்ணீர் தேங்கும் இடங்களில் மராமத்து செய்வதோடு பிறகு முழுமையாக செய்வதில்லை. கடந்த ஆண்டு தன்னார்வலர்கள் மூலம் ஓரளவு கால்வாய் சீரமைக்கப்பட்டாலும் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. அதனால் தற்போது தொடர் கன மழையால் கால்வாயில் தண்ணீர் வந்தும் கூட ஏரியை எட்டவில்லை. அதே போல மற்ற பகுதிகளில் இருந்து தண்ணீர் வரும் வரத்துவாரிகளும் சீரமைக்கப்படாமல் ஆக்கிரமிப்புகளில் உள்ளதால் மிகப் பெரிய ஏரி தண்ணீர் இன்றி காணப்படுகிறது. பல வருடங்களாக தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுவதால் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்துள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பெரியாத்தாள் ஏரிக்கு தண்ணீர் வரும் வரத்து வாரிகள், கால்வாயை சீரமைத்தால் தண்ணீர் நிரம்புவதுடன் பல கிராமங்களின் நிலத்தடிநீரும் பாதுகாக்கப்படும் என்கிறார்கள் விவசாயிகள். மேலும் நிரம்பும் தண்ணீரை பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் வெளியேற்றும் இரும்பு கதவுகளும் காணாமல் மண் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கதவுகளையும் சீரமைக்க வேண்டும் என்கிறார்கள். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல ஏரிகள் தண்ணீர் நிரம்பி உடைப்பு ஏற்படும் நிலையில் மிகப் பெரிய பெரியாத்தாள் ஏரி மட்டும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.
Related Tags :
Next Story