பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி நிறுத்தம்
தொடர் மழையால் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
புவனகிரி,
சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் சுற்றுலா மையம் உள்ளது. இங்கு கடலூர் மாவட்டம் மட்டுமின்றி, சென்னை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா போன்ற வௌிமாநிலங்களில் இருந்தும் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து உற்சாகமாக படகு சவாரி செய்வது வழக்கம்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையொட்டி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை மாவட்டத்தில் இடைவிடாது மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
இந்நிலையில் தொடர் மழையால் பிச்சாவரம் சுற்றுலா மைய வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் நேற்று படகு சவாரி நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்து நீடித்தால் இன்றும்(செவ்வாய்க்கிழமை) படகு சவாரி நிறுத்தப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story