விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை


விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை
x
தினத்தந்தி 9 Nov 2021 12:00 AM IST (Updated: 9 Nov 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

கடலூர், 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் பரவலாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன. ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கடலூரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டியது. நேற்று அதிகாலையும் மழை ஓயவில்லை. மாலை வரை விடாமல் மழை பெய்தபடி இருந்தது. சில நேரங்களில் கன மழையாகவும், சில நேரங்களில் மிதமான மழையாகவும் பெய்தது.

அழுகும் பயிர்கள்

இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக மஞ்சக்குப்பம் மைதானத்தில் உள்ள சாலை, நீதிபதிகள் குடியிருப்பு சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் நெல், வாழை, கத்தரி, வெண்டை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களிலும் தண்ணீர் அதிகளவு தேங்கி நிற்கிறது. தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும். 
இதேபோல் சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, வேப்பூர், லால்பேட்டை என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக இடைவிடாது மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. 

வாய்க்கால்களை தூர்வாரவில்லை

மேலும் குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். ஏராளமான இடங்களில் பாசன வாய்க்கால்களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மழைநீர் விளை நிலங்களுக்குள் புகுந்துள்ளது. இதனால் மாவட்டத்தில் சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். 
இதேபோல் கழிவுநீர் வாய்க்கால்களையும் அதிகாரிகள் சரியான முறையில் தூர்வார வில்லை. இதனால் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். பரவனாறு, கொள்ளிடம், வெள்ளாறு  போன்ற பல்வேறு ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
கடலூர் அருகே காராமணிக்குப்பத்தில் நேற்று வாரச்சந்தை நடைபெற்றது. ஆனால் மழை காரணமாக காய்கறி வாங்க பொதுமக்கள் செல்லாததால் வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதனால் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

சாலைகள் வெறிச்சோடின

இந்நிலையில் கடலூரில் பெய்து வந்த விடாத மழையால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடலூர் லாரன்ஸ் ரோடு, பாரதி சாவை, நேதாஜி சாலை ஆகிய சாலைகளில் ஆட்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கும். ஆனால் நேற்று விடாமல் பெய்த மழையால் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. ஒரு சில வாகனங்கள் மட்டும் அவ்வப்போது சென்று வந்ததை பார்க்க முடிந்தது.
அந்த வாகனங்களும் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி சென்றதை பார்க்க முடிந்தது. இந்த மழையால் சாலை யோர வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டனர். இருப்பினும் மழை கோட்டு, குடை விற்பனைஅதிகமாக இருந்தது. சாலையோரங்களில் வைத்து குடை, மழை கோட்டுகளை வியாபாரிகள் வந்து விற்பனை செய்ததை பார்க்க முடிந்தது.
கம்மாபுரம் அருகே  தேவங்குடியில் இருந்து கீரமங்கலம் செல்லும் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பெண்ணாடம் அடுத்த சவுந்தரசோழபுரம் கிராமத்தையும், அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தையும் இணைக்கும் வகையில் வெள்ளாற்றில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தை வெள்ளம் அடித்து சென்றது. இதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் இரு மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இது தவிர செம்பேரி கிராமத்தையும், அரியலூர் மாவட்டம் தெத்தேரி கிராமத்தையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட தரைப்பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
 விருத்தாசலம் அடுத்த பெரம்பலூர் - எடையூர் இடையே செல்லும் உப்பு ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் உச்சிமேடு  ஓடையில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அங்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இது தவிர அங்கு அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 90.9 மில்லி மீட்டர் மழை பெய்தது. குறைந்தபட்சமாக தொழுதூரில் 5 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 30.9 மில்லி மீட்டர் மழை பதிவானது.
மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
கடலூர் - 63.2
குப்பநத்தம் - 44.2
அண்ணாமலைநகர் -41.2
கலெக்டர் அலுவலகம்- 39.7
சிதம்பரம் - 38.8
புவனகிரி - 35
பண்ருட்டி - 34
காட்டுமன்னார்கோவில்
- 31
கொத்தவாச்சேரி - 31
வானமாதேவி - 27.6
குடிதாங்கி - 27
வடக்குத்து - 26
விருத்தாசலம் - 23
மே.மாத்தூர் - 22
சேத்தியாத்தோப்பு - 21.4
ஸ்ரீமுஷ்ணம் - 21.1
குறிஞ்சிப்பாடி- 21
லால்பேட்டை- 21
வேப்பூர் - 20
காட்டுமயிலூர்
- 19
லக்கூர் - 18
பெலாந்துறை- 17.2
கீழசெருவாய் - 14

Next Story