மோர்தானா அணையில் இருந்து 1,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றம். பேரணாம்பட்டு பகுதியில் கிராமங்கள் துண்டிப்பு


மோர்தானா அணையில் இருந்து 1,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றம். பேரணாம்பட்டு பகுதியில் கிராமங்கள் துண்டிப்பு
x
தினத்தந்தி 9 Nov 2021 12:01 AM IST (Updated: 9 Nov 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

மோர்தானா அணையில் இருந்து 1,300 கன அடி தண்ணீர் வெளியேறுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேரணாம்பட்டு பகுதியில் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

குடியாத்தம்

மோர்தானா அணையில் இருந்து 1,300 கன அடி தண்ணீர் வெளியேறுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேரணாம்பட்டு பகுதியில் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

1,300 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த மோர்தானா அணை நிரம்பி 1,300 கனஅடி தண்ணீர் வெளியேறி கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் குமரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கவுண்டன்யமகாநதி ஆற்றில் மோர்தானா அணை உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. 

இதன் காரணத்தால் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள மோர்தானா, கொட்டாரமடுகு, ஜிட்டப்பள்ளி, சேம்பள்ளி, ஜங்காலபள்ளி, உப்பரபள்ளி, ரங்கசமுத்திரம், ரேணுகாபுரம், அக்ராவரம், பெரும்பாடி, குடியாத்தம் நகரம் நெல்லூர்பேட்டை, பாவோடும்தோப்பு, இந்திரா நகர், ஒலக்காசி, சித்தாத்தூர் கிராமங்களில் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறும், ஆற்றில் குளிப்பது மற்றும் துணிகளை துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும், ஆற்றில் சிறுவர்களை குளிக்கவோ அல்லது விளையாடவோ பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

கண்காணிப்பு

கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் தலைமையில் தாசில்தார் லலிதா உள்ளிட்ட வருவாய் துறையினர் 24 மணி நேரமும் ஆற்றின் வெள்ள நீரை கண்காணித்து வருகின்றனர்.

அதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் தலைமையில் நகராட்சி பணியாளர்களும் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிராமங்கள் துண்டிப்பு

பேரணாம்பட்டு பகுதியில் நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை சுமார் 52 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் பத்தலபல்லி - மதினாப்பல்லி மலட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளம் நரியம்பட்டு கிராமத்தில் கொட்டாற்றை கடந்து பாலாற்றில் கலக்கிறது. ரெட்டிமாங்குப்பம் குப்பம் ஏரி நிரம்பி ராஜக்கல் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட எல்லையான நரியம்பட்டு அருகில் பன்னீர்குட்டை கிராமத்திலிருந்து சாத்தம்பாக்கம் செல்லும் வழியில் நீர்வரத்து கால்வாயில் 30 மீட்டர் தூரத்திற்கு உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோன்று இரண்டு கிராமங்களுக்கு இடையே செல்லும் சிறு தரை பாலமும் உடைந்து சேதமடைந்து இரண்டு கிராமங்களும் துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. தகவலறிந்ததும் பேரணாம்பட்டு தாசில்தார் வெங்கடேசன், ஒன்றிய ஆணையாளர் பாரி ஆகியோர் சென்று பார்வையிட்டனர். வருவாய் ஆய்வாளர் தேவேந்திரன் ராஜக்கல் ஊராட்சி மன்ற தலைவர் கருணாகரன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

சாலையில் அரிப்பு

பொகளூர் ஊராட்சியில் உள்ள கானாற்று ஓடையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காலபைரவர் கோவிலுக்குச் செல்லும் தார் சாலையில் அரிப்பு ஏற்பட்டு சுமார் 15 மீட்டர் தூரத்திற்கு அடித்து செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு ஒன்றியக் குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன், ஒன்றிய ஆணையாளர் ஹேமலதா, ஒன்றிய பொறியாளர் குகன் ஆகியோர் சென்று பார்வையிட்டு பொக்லைன் எந்திரம் கொண்டு மண்ணை நிரப்பி சாலையை சீரமைத்தனர்.

 பின்னர் மேல்பட்டி ஊராட்சியில் நாவீதம்பட்டி கிராமத்தில் ஊருக்கு மத்தியில் இருந்த வக்பு வாரியத்துக்கு சொந்தமான சுமார் 50 அடி ஆழமுள்ள கிணறு மழையினால் சரிந்து விழுந்ததை பார்வையிட்டு,  பொதுமக்கள் யாரும் கிணற்றின் அருகே செல்லாதவாறு தடுப்பு கட்டைகள் கட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டனர். உடன் பேரணாம்பட்டு ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பொகளூர் ஜனார்த்தனன், டேவிட், துணை செயலாளர் சத்தியா ஆகியோர் சென்றிருந்தனர்.

காட்டாற்று வெள்ளம்

வேலூரின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான அமிர்தி உயிரினப் பூங்கா அருகே கொட்டாறு செல்கிறது. தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நெக்கினி, தானிமரத்தூர், கொளையம், வேடகொல்லை மேடு, நம்மியம்பட்டு, கீழ் கொல்லை, ஊசனாவலசை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் ஓடை கால்வாய் வழியாக கொட்டாறு நீர் வீழ்ச்சியில் வந்து சேர்கிறது. இதன் காரணமாக நீர் வீழ்ச்சியில் நேற்று திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. 

இந்த வெள்ளம் நாகநதி, நஞ்சுகொண்டபுரம், பாலாத்துவண்ணான், சிங்கிரி கோவில் தடுப்பணை வழியாகச் சென்று கண்ணமங்கலத்தில் கலக்கிறது. ஆற்றில் மழைநீர் வெள்ளம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கே.வி.குப்பம்

கே.வி.குப்பத்தை அடுத்த ஆலங்கநேரி பஞ்சாயத்தில் உள்ள பஜனைகோவில் தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரி பராமரிக்கப்படாததால் குப்பைகளால் தூர்ந்து போய்விட்டது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வயலுக்குள் பாய்ந்ததால் அதைத்தடுக்க விளைநிலத்தின் வரப்பு உயர்த்தப்பட்டது.

 இதன்பிறகு மழைபெய்யும்போது மழைநீர் வெளியேற முடியாமல் அப்பகுதியைச் சூழ்ந்து தீவு போல் காட்சி அளித்து வருகிறது. 
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கவுன்சிலர் வேங்கையன், ஊராட்சி மன்ற தலைவர் கோகிலாகருணா ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர். அவர்கள் மழை வெள்ளம் தேங்கும் பகுதியை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.



Next Story