பொன்னை அணைக்கட்டில் 2 மாவட்ட கலெக்டர்கள் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னை அணைக்கட்டில் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் கலெக்டர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னை அணைக்கட்டில் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் கலெக்டர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
கலெக்டர்கள் ஆய்வு
ஆந்திர மாநிலம், கலவகுண்டா அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பொன்னையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் ஆகியோர் பொன்னை ஆற்றில் நீர் செல்வதையும், ஆற்றின் கரையோர பாதுகாப்பு குறித்தும் நேற்று நேரில் ஆய்வு செய்தார்கள்.
அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெள்ள அபாய எச்சரிக்கை
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கலவ குண்டா அணையிலிருந்து உபரி நீர் சுமார் 6,800 கன அடி பொன்னை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து ராணிப்பேட்டை மாவட்டத்தில், பொன்னை ஆற்றங்கரையோரம் உள்ள 16 கிராம ஊராட்சிகளிலும், வேலூர் மாவட்டத்தில் உள்ள 10 கிராம ஊராட்சிகளிலும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொன்னை அணைக்கட்டிலிருந்து ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு, கிழக்கு கால்வாய் வழியாக, சுமார் 400 கனஅடி தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. இதன்மூலம் 104 ஏரிகள் பயனடைகின்றன. இதுவரையில் 69 ஏரிகள் நிரம்பி உள்ளன. எஞ்சியுள்ள ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது.
ஏரிகள் பாதுகாப்பாக உள்ளது
வேலூர் மாவட்டத்தில், மேற்கு கால்வாய் வழியாக 18 ஏரிகள் பயன்பெறுகின்றன. இந்த 18 ஏரிகளும் ஏற்கனவே நிரம்பி விட்டது. பொன்னை ஆற்றில் 6,800 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதில் 400 கன அடி நீர் கிழக்கு கால்வாய் வழியாக திருப்பி விடப்பட்டது. இதுவரையில் கால்வாய்கள், ஏரிகள் பாதுகாப்பாக உள்ளது.
தொடர்ந்து கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஆறு மற்றும் ஏரிக்கரை ஓரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும் இருக்க, போதிய அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வள்ளிமலை வேல்முருகன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார உதவி செயற்பொறியாளர் குணசீலன், உதவி பொறியாளர் சிவசங்கரன், வாலாஜா தாசில்தார் ஆனந்தன், காட்பாடி தாசில்தார் ஜெகதீசன், காட்பாடி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story