கலவை பகுதியில் 400 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியது


கலவை பகுதியில் 400 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியது
x
தினத்தந்தி 9 Nov 2021 12:03 AM IST (Updated: 9 Nov 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

கலவை பகுதியில் பெய்த பலத்தமழை காரணமாக விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து 400 ஏக்கரில் அறுவடைக்கு தாயாராக இருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கியது.

கலவை

கலவை பகுதியில் பெய்த பலத்தமழை காரணமாக விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து 400 ஏக்கரில் அறுவடைக்கு தாயாராக இருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கியது.

தண்ணீரில் மூழ்கியது

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுக்காவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கலவை பகுதியில் உள்ள கலவை, வேம்பி, பென்னகர், கோடாலிநல்லூர், மேல்புதுப்பாக்கம், மாம்பாக்கம் ஆகிய ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. 

இந்த தண்ணீர் கலவை, பரிக்கல்பட்டு, சென்ன சமுத்திரம், சிட்டந்தங்கால், நல்லூர், கோடாலி, மேல்புலம், குப்பிடிசாத்தம், சொரையூர், அகரம் புதூர் உள்பட பல்வேறு கிராமங்களில் வயல்களுக்குள் புகுந்தது. இதனால் 400 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

இழப்பீடு வழங்க வேண்டும்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் கால்வாயை ஆக்கிரமித்துள்ளதால் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் வயல்களுக்குள் புகுந்து பயிர்கள் சேதமடைந்தன. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய்களை தூர்வார வேண்டும். நீரில் மூழ்கிய பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
ஏரிக்கு நீர்வரத்து

நெமிலியை அடுத்த பரமேஸ்வரமங்கலம் ஏரிக்கு நீர் வராததால் அப்பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று நெமிலி ஒன்றியக் குழு தலைவர் வடிவேலு, பரமேஸ்வரமங்கலம் ஏரிக்கு செல்லக்கூடிய கால்வாயில் ஏற்பட்டிருந்த உடைப்பை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கண்ணன், மற்றும் கோபி ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்று மணல் மூட்டைகள் அடுக்கி உடைப்பு சரி செய்யப்பட்டது.

இதன் காரணமாக பல ஆண்டுகளுக்கு பிறகு ஏரிக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஆட்டுப்பாக்கம், பரமேஸ்வரமங்களம், சித்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சார்ந்த விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
வீடு இடிந்தது

மேல்விசாரம் நகராட்சிக்கு உட்பட்ட புதுப்பேட்டை மூன்றாவது தெருவில் தொடர் மழையின் காரணமாக மும்தாஜ் பேகம் என்பவரின் வீடு முற்றிலும் இடிந்து சேதமடைந்து தரைமட்டமானது. இதுகுறித்து தகவலறிந்த மேல்விஷாரம் நகர தி.மு.க. பொறுப்பாளர் எஸ்டி.முஹம்மத் அமீன் நேரில் சென்று பார்வையிட்டு நகர தி.மு.க. சார்பில் ரூ.5,000 நிதி உதவி வழங்கினார். 

வாலாஜா அருகே உள்ள பாலாறு அணைக்கட்டில் இருந்து சுமார் 7,703 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் திருமலைச்சேரி உள்ளிட்ட ஊர் மக்கள் யாரும் நீரில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று தண்டோரா மூலம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story