உயர் அலுவலர்கள் வராமல் இருந்தால் நடவடிக்கை
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்துக்கு உயர் அலுவலர்கள் வராமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் எச்சரிக்கை விடுத்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்களே வந்தனர். இதனால் மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் ஒரு சில நபர்களை நின்று பதிவு செய்தனர்.
தொடர்ந்து கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது பொதுமக்கள் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
கடை நிலை ஊழியர்கள்
ஆனால் கோரிக்கை மனுக்கள் குறித்து விளக்கவும், அதை நிறைவேற்றவும் பெரும்பாலான துறைகளில் இருந்து உயர் அலுவலர்கள் கூட்டத்துக்கு வரவில்லை. மாறாக அவர்களின் உதவியாளர்கள், இள நிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் என கடை நிலை ஊழியர்கள் வந்திருந்தனர்.
இதை பார்த்த கூடுதல் கலெக்டர், கூட்டத்துக்கு எந்தெந்த துறைகளில் இருந்து உயர் அலுவலர்கள் வரவில்லை, அவர்களுக்கு பதிலாக வந்தவர்கள் யார் என்று கேட்டார். அதற்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் எழுந்து நின்றனர். அவர்களை அருகில் வரவழைத்த கூடுதல் கலெக்டர், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தொலை தூரங்களில் இருந்து கொண்டு வருகிறார்கள். எப்படியும் தங்கள் குறைகள் தீரும் என்ற நம்பிக்கையில் வருகிறார்கள். உங்கள் முகத்தை பார்க்க வரவில்லை என்றார்.
எச்சரிக்கை
மேலும் உங்களால் குறைகளை நிவர்த்தி செய்ய முடியுமா? உங்கள் துறைகள் தொடர்பாக எத்தனை மனுக்கள் வந்துள்ளது. அந்த மனுக்களில் எத்தனை நிறைவேற்றி உள்ளீர்கள் என்று கேட்டார். அதற்கு அனைவரும் தெரியாது. பதிவேடுகளை கொண்டு வரவில்லை என்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த கூடுதல் கலெக்டர், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்துக்கு உயர் அலுவலர்கள் வராவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வராதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதனால் கூட்டத்துக்கு வந்த கடைநிலை ஊழியர்கள் திகைத்து நின்றனர். பின்னர் தொடர்ந்து கூட்டம் நடந்தது. இருப்பினும் இந்த சம்பவத்தால் அலுவலர்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story