ராஜபாளையத்தில் நூதன முறையில் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


ராஜபாளையத்தில் நூதன முறையில் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
x
தினத்தந்தி 9 Nov 2021 12:12 AM IST (Updated: 9 Nov 2021 12:12 AM IST)
t-max-icont-min-icon

நூதன முறையில் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராஜபாளையம், 
ராஜபாளையத்தில் நூதன முறையில் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். 
ரூ.30 லட்சம் 
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ரமணன். வேலையின்றி இருந்த இவர் சொந்தமாக தொழில் தொடங்க கடன் வேண்டும் என, கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஒரு இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். இதையடுத்து இவரது செல்போன் எண்ணுக்கு பேசிய ராணி என்கிற பெண், குறைந்த வட்டியில் ரூ.2 கோடி வரை கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கம் கேட்டதற்கு நேரில் வந்த இன்பராஜ் என்பவர், தன்னிடம் கருப்பு பணம் அதிகமாக இருப்பதாகவும், பணத்தை வாகனத்தில் கொண்டு வரும் போது, போலீசாரிடம் சிக்காமல் இருக்க அனைத்து பணத்தையும் கார்பன் முலாம் பூசி எடுத்து வருவதாகவும் கூறி உள்ளார். 
மேலும் கடன் பெறுவதற்கு தாங்கள் முன்பணம் தர வேண்டும் எனவும் கூறியுள்ளார். ரமணனை நம்ப வைப்பதற்காக தண்ணீரில் சில ரசாயனங்களை சேர்த்து, தன்னிடம் இருந்த கருப்பு மை பூசப்பட்ட நோட்டுகளை அதில் போட்டு எடுத்த போது, ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தெரிந்தது. இதனை நம்பிய ரமணன் ரூ.30 லட்சத்தை, இன்பராஜ் கூறியபடி கோவில்பட்டிக்கு சென்று கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட இன்பராஜ், தலைமறைவானதாக கூறப்படுகிறது. 
2 பேர் கைது 
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரமணன் வேறு ஒரு செல்போன் எண்ணை கொண்டு வேறு பெயரில் கடன் தேவை என அதே இணையதளத்தில் பதிவு செய்தார். அந்த பதிவை பார்த்த அதே கும்பல் கடன் ஏற்பாடு செய்வதாகவும், பணத்தை ராஜபாளையத்திற்கு வந்து அளிக்குமாறும் கூறி உள்ளனர். 
அந்த கும்பலை பிடிக்க முடிவு செய்த ரமணன் இது குறித்து தான் சார்ந்த நாம் தமிழர் கட்சியின், ராஜபாளையம் கிளை நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரமணன் ராஜபாளையம் சென்ற போது அங்கு அந்த கும்பலை சேர்ந்த 3 பேர் வந்து பணத்தை கேட்டுள்ளனர். அப்போது அங்கு ஓடி வந்த நாம் தமிழர் கட்சியினர் 2 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். 
பிடிபட்ட இருவரும் திருத்தங்கலை சேர்ந்த ஜாக்சன் (வயது 42), மணிகண்டன்(40) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story