கால்வாயில் பாய்ந்த கார்; 5 பேர் உயிர் தப்பினர்


கால்வாயில் பாய்ந்த கார்; 5 பேர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 9 Nov 2021 12:24 AM IST (Updated: 9 Nov 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே கால்வாயில் கார் பாய்ந்தது. அதில் இருந்த 5 பேரை மற்றொரு கார் டிரைவர் காப்பாற்றினார்.

திருப்புவனம், 

திருப்புவனம் வடகரையை சேர்ந்த வீராச்சாமி மகன் முத்துகிருஷ்ணன் (வயது 29). இவர் மதுரை அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் மாலை கம்பெனி வேலையாக மதுரையிலிருந்து ராமநாதபுரத்திற்கு கார் ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது டி.பாப்பான்குளம் கீழ்ப்புறம் இந்திராநகர் அருகே மாரநாடு கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் அருகே மதுரை- பரமக்குடி நான்கு வழிச்சாலை செல்கிறது. அந்த கால்வாய் தண்ணீரில் ஒரு கார் பாய்ந்து உள்ளது. அந்த காருக்குள் இருந்தவர்கள் காப்பாற்றுங்கள் என கூக்குரலிட்டார்கள்.இதை பார்த்த முத்துகிருஷ்ணன் காரை நிறுத்தி விட்டு, கால்வாயில் இறங்கி ஒவ்வொருவராக மீட்டார். காருக்கும், கரைக்கும் 10 அடி தூரம் இருந்தது. காரில் இருந்த ஒரு வயதானவர், கணவன்-மனைவி, 2 குழந்தைகள் என 5 பேரை காப்பாற்றினார். அவர்கள் டிரைவர் முத்துகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவித்தார்கள். பின்னர் அவர்களை மற்றொரு காரில் அவர் மானாமதுரைக்கு அனுப்பி வைத்து உள்ளார்.5 ேபரை காப்பாற்றிய முத்துகிருஷ்ணனை சமூக ஆர்வலர்களும், அவருடன் சென்ற கட்டிட தொழிலாளர்களும் பாராட்டினார்கள். விபத்தில் சிக்கியவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story