மாவட்டம் முழுவதும் கூடுதலாக 95 வாக்குச்சாவடிகள் அமைப்பு-கலெக்டர் விஷ்ணு தகவல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் கூடுதலாக 95 வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.
நெல்லை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் கூடுதலாக 95 வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் வாக்குச்சாவடி பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சியினருடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு பேசும் போது கூறியதாவது:-
7.28 லட்சம் வாக்காளர்கள்
நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை மாநகராட்சி, 2 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு தேர்தல் ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. நகர்ப்புற பகுதிகளில் உள்ள 370 வார்டுகளுக்கான வாக்காளர்களை பிரிக்கும் பணி அதிகாரிகள் மூலம் நடைபெற்று வருகிறது.
நெல்லை மாநகராட்சியில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 389 வாக்காளர்களும், அம்பை, விக்கிரமசிங்கபுரம் ஆகிய 2 நகராட்சிகளில் 73 ஆயிரத்து 364 வாக்காளர்களும், 17 பேரூராட்சிகளில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 194 வாக்காளர்களும் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 28 ஆயிரத்து 340 வாக்காளர்கள் உள்ளனர்.
கூடுதல் வாக்குச்சாவடிகள்
தேர்தல் ஆணைய விதிமுறைப்படி ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்களுக்கு மிகாமல் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கு 490 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக மாநகராட்சி பகுதியில் கூடுதலாக 79 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அம்பை, விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகளில் உள்ள 42 வார்டுகளுக்கு 93 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. நகராட்சிகளில் கூடுதலாக 6 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் 17 பேரூராட்சிகளில் உள்ள 273 வார்டுகளுக்கு மொத்தம் 319 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலுக்கென கூடுதலாக பேரூராட்சி பகுதிகளில் 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மொத்தமாக நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தலுக்கு இந்த ஆண்டு கூடுதலாக 95 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story