தினத்தந்தி புகார் பெட்டி


அரியலூர்
x
அரியலூர்
தினத்தந்தி 9 Nov 2021 12:57 AM IST (Updated: 9 Nov 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

இடையூறாக உள்ள மின்மாற்றி 
பெரம்பலூர் நகராட்சி 7-வது வார்டுக்கு உட்பட்ட புதிய மதனகோபாலபுரம் பாரதிதாசன் தெருவில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில்  இடையூறாக மின்மாற்றி ஒன்று உள்ளது. சிறுவர்-சிறுமிகள் விளையாடும் பகுதியிலும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் உள்ள இந்த மின்மாற்றியை வேறு இடத்துக்கு மாற்ற சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
வாசுகி இளங்கோ, புதிய மதனகோபாலபுரம், பெரம்பலூர்.

குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், தோகைமலையில் வேதாசலபுரம் பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகள், மோட்டார் சைக்கிளில் செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையில் இருக்கும் பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதினால் பள்ளத்தில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பாலசுந்தரம், வேதாசலபுரம், கரூர். 

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சாலையில் ஏராளமான கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இந்த கால்நடைகள் சாலையின் குறுக்கே திடீரென செல்வதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் பெரும் விபத்து நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருமயம், புதுக்கோட்டை. 

பழுதடைந்துள்ள கழிவுநீர் வாய்க்கால் 
அரியலூர் மாவட்டம், திருமானூர் 4-வது வார்டில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட்டது. இந்த வாய்க்கால் முறையாக பராமரிக்கப்படாததால் ஆங்காங்கே பழுதடைந்தும், தூர்வாரப்படாததால் தூர்ந்து போயும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் செல்கிறது. மேலும் பலத்த மழைபெய்யும்போது கழிவுநீர் சாலையில் சென்று தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
லட்சுமி, டி.கே.எஸ்.நகர், அரியலூர். 

பயனற்ற நீர்த்தேக்க தொட்டி 
திருச்சி மாவட்டம் காட்டூர் பாப்பாக்குறிச்சி பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் மின்மோட்டாருடன் கூடிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நீர்த்தேக்க தொட்டி பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பாப்பாக்குறிச்சி, திருச்சி. 

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் 
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கோட்டம், 7-வது வார்டு சஞ்சீவி நகர், நேரு தெரு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் செல்ல வழியின்றி கழிவுநீருடன் கலந்து தாழ்வான பகுதியில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் அவற்றில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சையது முஸ்தபா , சஞ்சீவி நகர், திருச்சி.

ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம் 
திருச்சி மாவட்டம், கே.கே.நகர் கிருஷ்ணமூர்த்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கே.கே.நகர், திருச்சி. 

பாதாள சாக்கடையில் அடைப்பு 
திருச்சி மாநகராட்சி காட்டூர் 61-வது வார்டு திருநகர் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு,  சாக்கடையின் மேல் மூடி வழியாக மழைநீருடன் கலந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்பதுடன் கழிவுநீருடன் மழைநீர் சேர்ந்து வருவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இதில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருநகர், திருச்சி. 

குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
திருச்சி மாநகராட்சி 36-வது வார்டு பொன்மலைப்பட்டி காந்தி தெரு இந்தியன் வங்கிக்கும், பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் இடையில் சாலையோரத்தில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர்  வீணாகி வருகிறது.  இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குடிநீர் சாலையில் செல்வதினால் சாலை சேறும், சகதியுமாக உள்ளது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பொன்மலைப்பட்டி, திருச்சி. 

மயான பாதை அமைத்து தரப்படுமா? 
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டப்பாளையம் ஊராட்சியில் சுமார் 6 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். அவர்களில் கோட்டப்பாளையத்தில் சுமார் 1000 பேர் ஆதிதிராவிட இனத்தை சேர்ந்தவர்களும், அருந்ததியர் இனத்தை சேர்ந்தவர்களும் வசிக்கின்றனர். இரு பிரிவினருக்கும் தனித்தனியே மயானங்கள் கோட்டப்பாளையம்− மாராடி சாலையிடையே அமைந்துள்ளது. இவ்விரு மயானங்களுக்கும் சரியான பாதை வசதியில்லாததால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் இறந்தவர் உடலை எடுத்துச் செல்வதில் அதிக சிரமம் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கோட்டப்பாளையம், திருச்சி. 

குப்பைகளால் நோய் பரவும் அபாயம் 
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள கொல்லாங்குளத்தின் கரையோரம் குப்பைகள் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், எடமலைப்பட்டிபுதூர், திருச்சி. 


Next Story