தனியார் நிதி நிறுவனத்தில் பயங்கர தீ


தனியார் நிதி நிறுவனத்தில் பயங்கர தீ
x
தினத்தந்தி 9 Nov 2021 1:12 AM IST (Updated: 9 Nov 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

நெல்லை:
நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

பயங்கர தீ

நெல்லை சந்திப்பு மதுரை ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அமைந்துள்ளது. இதன் மாடியில் தனியார் வீட்டு வசதி மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் அங்குள்ள ஒரு நிதி நிறுவனத்தில் நேற்று ஊழியர்கள் பணியை முடித்துவிட்டு மாலையில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். இரவு சுமார் 8.30 மணிக்கு திடீரென்று நிதி நிறுவன அலுவலக பகுதியில் இருந்து கரும் புகை வந்தது. பின்னர் தீ மளமளவென்று பற்றி எரிந்தது. கொட்டும் மழையிலும் தீ கட்டிடத்துக்கு வெளியே பயங்கரமாக கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி தடுப்புகள் வெடித்து ரோட்டில் சிதறின.

தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்

இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் மற்றும் சந்திப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். 

இதையொட்டி மதுரை ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மின் வினியோகமும் தடை செய்யப்பட்டது.
முற்றிலும் தீ அணைக்கப்பட்ட பிறகு மின்வினியோகம் செய்யப்பட்டது. ரோட்டில் சிதறிக் கிடந்த கண்ணாடி துண்டுகளை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். இந்த தீவிபத்தால் அங்கு இருந்த ஆவணங்கள், பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

மின்கசிவு

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் நெல்லை சந்திப்பு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story