பெங்களூருவில் ஆட்டோ கட்டணம் உயர்வு; வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது
பெங்களூருவில் ஆட்டோ பயண கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
கியாஸ் விலை உயர்வு
நாட்டில் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வந்தது. இந்த நிலையில் மத்திய-மாநில அரசுகள் வரியை குறைத்துள்ளதால், கர்நாடகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.13-ம், டீசல் விலை ரூ.19-ம் குறைந்துள்ளன. அதே நேரத்தில் வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பெங்களூருவில் கியாஸ் என்ஜின் பொருத்தப்பட்ட ஆட்டோக்கள் தான் அதிகளவில் ஓடுகின்றன. அதனால் ஆட்டோ பயண கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று ஆட்டோ டிரைவர்கள் கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆட்டோ கட்டணம் அதிகரிப்பு
இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி எல்லை பகுதியில் ஓடும் ஆட்டோக்களின் பயண கட்டணத்தை உயர்த்தி மாநில அரசின் மண்டல போக்குவரத்து அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஆட்டோவில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணம் ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஒரு கிலோ மீட்டர் தூர கட்டணம் ரூ.12.50-ல் இருந்து ரூ.15 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது
அதே போல் ஆட்டோக்களில் இரவு நேர பயண கட்டணம் 1½ மடங்கு வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது உள்ள கட்டணத்தை விட கூடுதலாக 50 சதவீதத்தை வசூலித்து கொள்ளலாம்.
இந்த புதிய கட்டண விவரத்தை 90 நாட்களில் மீட்டர்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ கட்டண உயர்வு வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதே வேளையில் ஆட்டோ கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story