ஆடு மேய்த்த பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிக்க முயற்சி


ஆடு மேய்த்த பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிக்க முயற்சி
x
தினத்தந்தி 8 Nov 2021 9:02 PM GMT (Updated: 8 Nov 2021 9:02 PM GMT)

ஆடு மேய்த்த பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிக்க முயன்றது தொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே செல்லியம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மனைவி பார்வதி (வயது 50). இவர் நேற்று மாலை தனது காட்டில் ஆடுகள் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்மநபர்கள் பார்வதியின் கழுத்தில் கிடந்த தங்க தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் சுதாரித்து கொண்ட பார்வதி திருடன்..., திருடன்... என்று சத்தம் போட்டார். இதனால் அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி சென்றனர். பார்வதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களிடம் பார்வதி நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் மர்மநபர்கள் காரில் தப்பி சென்ற விவரத்தை அருகே உள்ள புதுநடுவலூர் கிராம மக்களுக்கு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து புதுநடுவலூர் கிராம மக்கள் சாலையின் குறுக்கே கற்களை போட்டு அந்த காரை வழிமறித்து, காரில் வந்த 3 பேரை பிடித்து செல்லியம்பாளையம் கிராம மக்களிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு சென்று, 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் செல்லியம்பாளையம் கிராமத்தில் ஒரு காட்டில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை கிராம மக்கள் பிடித்து வைத்திருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் மீண்டும் செல்லியம்பாளையம் கிராமத்திற்கு சென்று அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து, அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story