தொடர் மழை காரணமாக கேத்தி-சேலாஸ் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு


தொடர் மழை காரணமாக கேத்தி-சேலாஸ் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
x
தினத்தந்தி 9 Nov 2021 3:48 AM IST (Updated: 9 Nov 2021 3:48 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழை காரணமாக கேத்தி-சேலாஸ் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு

ஊட்டி

தொடர் மழையால் கேத்தி-சேலாஸ் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலையில் மரங்கள் விழுந்தன

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதற்கிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை தீவிரம் அடைந்து உள்ளதால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. 

இதன் காரணமாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்கிறது. இதனால் சாலையோரங்களில் உள்ள மண் எப்போதும் ஈரப்பதமாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று தொடர் மழை காரணமாக ஊட்டி-கோத்தகிரி சாலை மைனலா பகுதியில் ஒரே இடத்தில் 5 மரங்கள் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தும், தொங்கியபடியும் இருந்தன. 

இதனால் அரசு பஸ்கள், சரக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு பகுதியில் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் மரங்கள் அகற்றப்பட்டு, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, முழுமையாக மரங்கள், கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.

 இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலைப்பாதையில்  வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

நிலச்சரிவு

ஊட்டி அருகே கேத்தியில் இருந்து சேலாஸ் செல்லும் சாலை காட்டேரி அணை பகுதியில் சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. மண் மற்றும் பாறைகள் சாலையே தெரியாத அளவுக்கு விழுந்து கிடந்தன. இதனால் அரசு பஸ், பள்ளி வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதன் காரணமாக பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு சென்றவர்கள் நடந்து போனார்கள்.

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் குவிந்து கிடந்த மண், பாறைகளை அப்புறப்படுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சாலையில் சீரமைப்பு பணி முடிந்த பின்னர் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. நிலச்சரிவால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பருவமழை காலங்களில் காட்டேரி அணை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். 

உதவி கலெக்டர் ஆய்வு

இந்நிலையில் கோத்தகிரி பகுதியில் நிலச்சரிவு, வெள்ள அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்ட கன்னிகா தேவி காலனி பகுதியை நேற்று குன்னூர் உதவி கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி நேரில் சென்று ஆய்வு செய்தார். 

மேலும் பேரிடர்களை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கோத்தகிரி தாசில்தார் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் தீபக் உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story