தொடர் மழையால் பைக்காரா அணையில் இருந்து உபரிநீர் திறப்பு
தொடர் மழையால் பைக்காரா அணையில் இருந்து உபரிநீர் திறப்பு
ஊட்டி
தொடர்மழையால் வேகமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பைக்காரா அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் 456 நிவாரண முகாம்கள் தயார்நிலையில் உள்ளது .
அணை தண்ணீர் திறப்பு
மலை மாவட்டமான நீலகிரியில் தென்மேற்கு பருவமழை ஏற்கனவே தொடங்கி விட்டது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் எமரால்டு, அப்பர்பவானி, அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இந்த தண்ணீர் அணைகளில் சேகரமாகி வருகின்றன.
தொடர் மழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குந்தா, பைக்காரா, முக்குருத்தி, காமராஜ் சாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. நீர்மட்டம் உயர்ந்து இயற்கை எழிலுடன் காட்சி அளிக்கிறது.
குறிப்பாக பைக்காரா அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் 95 அடியாக நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் நேற்று முதல் திறந்து விடப்பட்டு வருகிறது. வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் 3 மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது.
கால்வாயில் பாய்ந்தோடும் தண்ணீர் பைக்காரா நீர்வீழ்ச்சி வழியாக செல்கிறது. நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
456 முகாம்கள் தயார்
நீலகிரியில் 6 தாலுகாக்களில் நிலச்சரிவு ஏற்படக்கூடியது என 283 இடங்கள் அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்டு இருக்கிறது. அந்த பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர்கள் பேரிடர் பாதிப்பு ஏதேனும் ஏற்படுகிறதா என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 42 மண்டல குழுவினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வெள்ளம் போன்ற பேரிடர் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்கிறது. மேலும் பொக்லைன் எந்திரங்கள், மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
நீலகிரியில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் இதுவரை மழை காரணமாக மொத்தம் 33 வீடுகள் பகுதி சேதம் அடைந்து உள்ளது. இதனை நேரில் ஆய்வு செய்து 33 வீடுகளில் வசித்து வந்தவர்களுக்கு தலா ரூ.4,100 வீதம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு உள்ளது.
கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் மரங்களுக்கு கீழ் நிற்பதையும், வாகனங்கள் நிறுத்துவதையும் தவிர்க்க வேண்டும். பேரிடர் பாதுகாப்பு மற்றும் மீட்பு குறித்து 1077 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story