புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முதியவர் சாவு
புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்குன்றம்,
கன மழை காரணமாக சென்னையை அடுத்த புழல் ஏரி நிரம்பியதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதால் புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்தநிலையில் செங்குன்றத்தை அடுத்த வடகரை காந்தி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 65) என்ற முதியவர் நேற்று வடபெரும்பாக்கம் பகுதியில் புழல் ஏரி உபரி நீர் கால்வாயில் கை, கால்களை கழுவுவதற்காக இறங்கினார். அப்போது அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், சிறிதுநேர தேடுதலுக்கு பிறகு ஆறுமுகத்தை பிணமாக மீட்டனர். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை போரூர் அடுத்த மதனந்தபுரம், மாதா நகர் 6-வது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் நேற்று 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். மாங்காடு போலீசார், ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்?, அவர் கழிவுநீர் கால்வாயில் பெருக்கெடுத்து சென்ற வெள்ளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்துவிட்டு உடலை கழிவுநீர் கால்வாய்க்குள் வீசி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story