செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம் - அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு


செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம் - அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 9 Nov 2021 11:14 AM IST (Updated: 9 Nov 2021 11:14 AM IST)
t-max-icont-min-icon

அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்க செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஏரியை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு செய்தார்.

பூந்தமல்லி,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் ஏரியின் நீர்ட்டம் கிடு கிடுவென உயர்ந்தது.

அணையின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் 5 கண் மதகு வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது. முதலில் 2-வது ஷட்டர் வழியாக 500 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர், ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததால் படிப்படியாக 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.

நேற்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 21.33 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2,942 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. நீர் வரத்து வினாடிக்கு 710 கன அடியாக இருந்தது.

2-வது நாளாக நேற்றும் கனமழை நீடித்ததால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் ஆதாரமாக விளங்கும் பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், நேமம் ஆகிய ஏரிகள் நிரம்பும் நிலையை எட்டி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இந்த ஏரிகள் நிரம்பி செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தால் வெளியேற்றும் உபரி நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி நடந்தால் அடையாறு ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உண்டாகும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.

எனவே அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில் உபரி நீரை சீராக வெளியேற்ற திட்டமிட்டு, 2 ஷட்டர்கள் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரை தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர். மேலும் செம்பரம்பாக்கம் ஏரியை 20 அல்லது 21 அடியில் சீராக வைத்து கண்காணிக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் துரைமுருகன், நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏரியில் இருந்து இதுவரை விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் அடையாறு ஆற்றில் திறந்து விடப்படுகிறது. சென்னையில் அதிகபட்சமாக மழை இருக்குமானால் ஏரியின் அனைத்து மதகுகளையும் திறந்துதான் ஆக வேண்டும். நீர் நிலைகளை காப்பாற்ற வேண்டும். சேதாரமானால் பெரும் விளைவை ஏற்படுத்தும். இவ்வளவு தண்ணீர் வீணாக போகிறது என எனக்கு அங்கலாய்ப்பு இருந்தாலும் மக்கள் உயிர், அதைவிட பெரியது.

ஆற்றங்கரையோரம் வீடு கட்டி இருப்பவர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். பொதுவாக நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு இருக்ககூடாது என்பது சுப்ரீம் கோர்ட்டின் திட்டவட்ட முடிவு. நாங்கள் அகற்றுகிறோம். அவர்கள் மீண்டும் வந்து விடுகிறார்கள். நாங்கள் உபரி நீரை மொத்தமாக திறக்காமல் படிப்படியாக திறந்து விடுகிறோம். நீர் வெளியேற்றுவதை ஜாக்கிரதையாகவும், உள்ளே வருவதை கவனித்து கொண்டும் இருக்கிறோம்.

இ்வ்வாறு அவர் கூறினார்.

Next Story